இலங்கையின் மரபுக் கவிஞர்களில் கவிஞர் வி.கந்தவனத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. ‘கவியரங்குக்கோர் கந்தவனம்’ என இரசிகமணி கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் கவிஞர் கந்தவனம். என் பால்ய காலத்திலேயே இலங்கையில் வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடாக இவரது பெயர் எனக்கு அறிமுகமானது. கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி), நிலாவணன், திமிலைத்துமிலன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மஹாகவி, இ.முருகையன், மதுரகவி இ.நாகராஜா, வேந்தனார், அம்பி என்று தொடரும் இலங்கைத்தமிழர் கவிதையுலகில் கவிஞர் கந்தவனத்துக்கொரு நிலையான இடமுண்டு.
கவிஞரின் படைப்புகளில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான தொகுப்புகளாக நான் கருதுவது ‘பாடு மனமே’, ‘இலக்கிய உலகம்’, மற்றும் ‘கீரிமலையினிலே‘ ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள நல்லதொரு கவிதை ‘பாவலனாகிடல் வேண்டும்’.
‘காலை, மாலை மற்றும் இரவு வேளைகளிலெல்லாம் மானுடர் வேலை செய்கின்றார். காலம் முழுவதும் இவர் செய்யும் வேலை எந்தவிதப் பயனுமற்றது. இவ்விதமாக வேலை , வேலை என்று நாளும் பொழுதும் வாழும் மானிடர் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது. சோலி, சுரட்டில் அவர்தம் வாழ்வு சோர்ந்து தளர்ந்திடுகின்றது. வஞ்சகமும், சூதும், களவும் நிறைந்தவர் தஞ்சம் பெறுமுலகில், அவர்களுக்கஞ்சி நீதியும் மறைந்து விடுகிறது. பஞ்சக் கொடுமைகள், சாதிச்சண்டைகள் மலிந்த இவ்வுலகு கண்டு நெஞ்சம் வெடிக்கிறது.’