– தாயகம் (கனடா)வில் தொண்ணூறுகளில் தொடர்நாவலாகப் பிரசுரிக்கப்பட்ட எனது நாவலான 1983 தாயகம் சஞ்சிகை நின்று விடவே இடையில் எட்டு அத்தியாயங்களுடன் நின்று போனது. வெளிவந்த அத்தியாயங்களின் விபரங்கள் வருமாறு: அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு, அத்தியாயம் மூன்று, அத்தியாயம் நான்கு., அத்தியாயம் ஐந்து: பிரச்சினைக்குரிய தீர்வு?, அத்தியாயம் ஆறு: நடைமுறையும், தத்துவமும், அத்தியாயம் ஏழு: போரும், மனிதனும் , சூழலும்., அத்தியாயம் எட்டு: அகதி முகாம். இந்த நாவல் 1983 கறுப்பு ‘ஜுலை’க் கலவர நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது; முற்றுப்பெறவில்லை. ஒரு பதிவுக்காக வெளியான எட்டு அத்தியாயங்களும் மீள்பிரசுரமாகின்றன. இந்த நாவலினை மீண்டும் எழுதுவதற்கான நோக்கமெதுவும் தற்போதில்லை என்பதால் இந்தப் பதிவு முக்கியமானது. – வ.ந.கி –
அத்தியாயம் ஒன்று!
வாழ்க்கை சில வேளைகளில் சலிப்புற்றுப் போய்விடுகின்றது. இனம் புரியாத சோர்வும், தளர்வும் உடல் முழுக்கப் பரவிவிடுகின்றன. ஏனென்று புரியாததொரு ஏக்கம் , எதற்காக இந்தப் பிறப்பு? , பிறப்பின அர்த்தமென்ன? என்பன போன்ற விடை தெரியாக்கேள்விகளால் நெஞ்சு நிறைந்து விடுகின்றது. சிறு கிரகம். சிறு தீவு. இதற்குள் ஒரு வாழ்க்கை. பிறகேனிவ்விதம் மோதலும், இரத்தக்களரியும்… ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய பொழுதுகளைச் சிதைத்துச் சீரழிக்கின்றோம். ஏன்? இனம், மதம், மொழி போன்ற விடயங்களில் மனிதர்கள் இன்னமும் மந்தைக் கூட்டம் போன்றுதான் செயற்படுகின்றார்கள். ஆறாவது அறிவைப் பாவிக்க விடாமல் உணர்வுகள் தடுத்து விடுகின்றன. சரி, பிழை எல்லாம் தெரிந்துதானிருக்கின்றது. ஆனாலும் அவற்றை உணர்ந்து வாழ முடிவதில்லை. அண்மைக்காலமாகவே மீண்டும் தமிழ் மக்கள் மீதான் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடரத்தொடங்கி விட்டன. காந்தியம் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். ஆங்காங்கே படையினரால், காடையினரால் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் தொடரத்தொடங்கி விட்டன. குடும்பத்தவரை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. என்னையே நம்பிக் கனவுகளுடனிருக்கின்றார்கள். எத்தனை வருடங்கள் எங்களிற்காக அம்மா மாடாய் உழைத்திருப்பா. ஒரே மகனையும் கொழும்புக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு நாடிருந்த நிலையில், குமருகளுடன் கிராமத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த உள்ளத்தை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. கணவனையிழந்த நிலையில் , தன்னந்தனியாக, எவ்வளவு நெஞ்சுரத்துடன் எங்களை வளர்த்து வந்திருக்கின்றா. அந்தக் கருணைக்கு நாங்கள் எவ்விதம் கைம்மாறு செய்யப்போகின்றோம்? இதற்கிடையில் மல்லிகா வேறு. இவள் என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களில் ஒருத்தி. சிங்களப் பெண். கள்ளங்கபடமற்ற அவள் சொல்லும், செயலும் , நெஞ்சும் என்னை ஏனோ தெரியவில்லை ஈர்க்கத்தான் செய்து விடுகின்றன. இவள் விடயத்தில் நான் என்னை மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருக்கின்றது. வாழ்க்கையைத் தொலை நோக்குடன் சிந்திப்பவன் நான். அதிலும் அதிகமாக சமுதாயப் பிரக்ஞையென்று சொல்லுகின்றார்களே அதில் கொஞ்சமும் என்னிடமுமிருப்பதாகக் கருதுபவன். நாடிருக்கும் நிலையில் எப்படியெப்படியெல்லாம் என் வாழ்க்கை சுழன்றடிக்கப்போகின்றதோ தெரியவில்லை. இந்த நிலையில் இவளை என்னுடன் இணைத்துப்பார்க்கவே முடியாமலிருக்கின்றது. யதார்த்தத்தில் சாத்தியமாகக் கூடிய விடயமாகவும் தெரியவில்லை.