பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
நூல் – விளக்கம்
நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,
“நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலு முடிவும் மாறுகோ னின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே” (செய்.நூற்:159)