அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய ‘புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி’ என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.