நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.
என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள். அவ்வளவுதான் என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.
Continue Reading →