குத்துவிளக்கு திரைப்படம் 1970 களில் உருவான சூழல் மிகவும் முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) – என். எம். பெரேரா (சமசமாஜி) – பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில் வெங்காயம் – மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசியது. உள்நாட்டு ஆடைத்தொழிலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தரமற்ற வணிக இதழ்கள் மீதான கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றியது.
அதுவரைகாலமும் இந்திய திரைப்படங்களை இறக்குமதி செய்து கோடி கோடியாக சம்பாதித்த இலங்கையில் திரைப்படங்களின் இறக்குமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடிய பெரும் தனவந்தர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட கள்ளப்பணத்தை வெளியே எடுப்பதற்காக புதிய ஐம்பது – ரூபா நூறு ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி மோசடிகளில் ஈடுபட்ட சில பெரும் புள்ளிகள் கைதானார்கள். கொழும்பு தெற்கில் வோர்ட் பிளேஸில் முன்னாள் அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின் வாசஸ்தலத்திற்கு அருகாமையில் தமது கட்டிடக்கலை பணியகத்தை நடத்திக்கொண்டிருந்த துரைராஜா அவர்களுக்கு தாமே ஒரு தமிழ்த்திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவானது தற்செயலானது என்று சொல்ல முடியாவிட்டாலும் அன்றைய காலப்பின்னணியும் அவரை அந்தப்பரீட்சைக்கு தள்ளியிருந்தது எனச்சொல்லலாம்.