கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தாயகம்’ சஞ்சிகையின் பங்களிப்பு.
கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் ‘தாயகம்’ சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. ஐந்து வருடங்கள் வரையில் 200ற்கும் அதிகமான இதழ்கள் வெளியாகியது மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரின் படைப்புகளையும் தாங்கி வெளியான சஞ்சிகை / பத்திரிகை அது. மாத்தளை சோமு , பேராசிரியர் சிவசேகரம், கலா மோகன் (பல படைப்புகள்: ஜெயந்தீசன் என்னும் பெயரில் எழுதிய குட்டிக்கதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்ற), தி. உமாகாந்தன், செல்வம் (இவரது ‘கிழுவை மரச் சிலுவை’ என்னும் நாடகம் தாயகத்தில் தொடராக வெளிவந்தது), ரதன், ஆனந்தபிரசாத் (‘ஆடலுடன், பாடலைக்கேட்டு’ தொடர்), வ.ந.கிரிதரன் (பல படைப்புகள்: சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் ஆகியன), கவிஞர் கந்தவனம் (இவரது ‘மணிக்கவிகள்’ தாயகம் சஞ்சிகையில்தான் முதலில் வெளியாகின), ஜி.மொனிக்கா (இவரது பல சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன), நேசமித்திரனின் பல படைப்புகள், சின்னத்தம்பி வேலாயுதத்தின் ‘ஈழம் ஒரு தொடர்கதை’த் தொடர்) கனடா மூர்த்தி ‘முனி’ என்னும் பெயரில் அளித்த சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதில்கள் , ஜோர்ஜ் குருஷேவ்வின் ‘சிறுகதைகள்’ .. என பலரின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை / சஞ்சிகை ‘தாயகம்’. ‘தாயகம்’ பத்திரிகை. சஞ்சிகையினைத் தவிர்த்துக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிக் கதைக்க முடியாது. இங்கு குறிப்பிட்டவர்களைப் போல் இன்னும் பலர் ‘தாயக’த்துக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். ‘தாயகம்’ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வொன்றின் அவசியம் (கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு அது ஆற்றிய பங்களிப்பு பற்றி) தவிர்க்க முடியாது. ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையில் சுமார் 50 வரையிலான இதழ்களுள்ளன. ‘தாயகம்’ சஞ்சிகை தனது அரசியல் கருத்துகளைப் படைப்பாளிகளின் மேல் ஒருபோதுமே திணித்ததில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களின் படைப்புகளை பலவற்றைத் தாங்கி அதனால் வெளிவர முடிந்திருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து , மிக அதிகமான இதழ்களை வெளியிட்ட இலக்கியச் சஞ்சிகை / பத்திரிகை அது.