வெகுசன பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதும் நிர்ப்பந்தத்திலுள்ள எழுத்தாளர்கள் பலர் தம் எழுத்துகளில் அடிக்கடி தவறுகள் பலவற்றை இழைத்து விடுகின்றார்கள். வாசகர்களைக் கவர வேண்டுமென்ற நோக்கில் இவர்கள் வார்த்தை ஜாலங்களைப் புரியும்போது, தம்மையறியாமலேயே இழைத்துவிடும் இவ்வகையான தவறுகள் படைப்பொன்றில் பல இருப்பின் அப்படைப்பின் தரம் தாழ்ந்துபோய் விடும் அபாயமிருப்பதைப் புரிந்துகொண்டால், எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்து எழுதினால், இவ்வகையான தவறுகளுக்கு இடமில்லை. அண்மையில் விகடன் தீபாவளி மலரில் வெளியான எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ‘கோப்பைகள்’ சிறுகதையினை வாசித்தபோது இவ்வகையான எண்ணங்கள் ஏற்பட்டன.
ஒரு புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழ் அகதி ஒருவனைப் பற்றிய கதையிது. நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் அவன். அவனைப் பற்றிய அறிமுகத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது: