தமிழகத்தில் இலக்கியம் தோன்றிய காலத்திலேயே அவ்விலக்கியத்தை முன்மொழிதல், இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தல் போன்ற நிலையில் இயக்கச் சாயலுடனான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன என்றே கருதலாம். சங்க காலத்தில் இருந்த முதல், இடை, கடைச் சங்கங்கள் இலக்கிய இயக்க அடிப்படை வாய்ந்தனவே ஆகும். பலர் ஒன்றாக ஓரிடத்தில் கூடி ஒரு பொருள் பற்றிச் சிந்திப்பது அல்லது படைப்புகள் பற்றி ஆராய்வது என்ற நிலையில் அமைந்தது சங்கம் என்ற அமைப்பாகும். குழு மனப்பான்மையுடன் பலரும் உயர இலக்கியத்தின்வழி வழி காண்பது இலக்கிய இயக்கமாகின்றது.
சைவ சமய எழுச்சி காலத்தில் பக்தி இலக்கியம் கொண்டு சமுதாயத்தில் பெருத்த விழிப்புணர்ச்சியை அருளாளர்களால் ஏற்படுத்த முடிந்தது. ‘இலக்கிய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் தனியிடத்தைப் பெற்றது பக்தி இயக்கம். இவ்வியக்கம் கலைக்குப் புத்துயிர் அளித்தது. பல்வகை இடங்களுக்குச் சென்று பதிகம் பாடியும், இறைவடிவங்களைப் பாசுரங்களில் ஒதியும்,இறையடியார்களுக்குக் காப்பியம் புனைந்தும்,இறைநலம் சார்ந்த பிரபந்தங்களை உருவாக்கியும் இலக்கிய வளம் சேர்த்தது இவ்வியக்கம்.’| என்றவாறு பக்தி இயக்கப் பணிகள் குறிக்கத்தக்க இடத்தைத் தமிழக வரலாற்றில் பெற்றுள்ளன.