சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தினமும் பேசப்படும் ஊராக விளங்கிவிட்டது புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு இதுவரை சென்றிராத தென்னிலங்கை சிங்கள மக்களும் மலையக மக்களும், இந்த ஊரின் பெயரை பதாதைகளில் தாங்கியவாறு வீதிக்கு வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும் இந்தத்தீவு எதிரொலித்தது. ஜனாதிபதியை வரவழைத்தது. இலங்கையில் மூவினத்து மாணவர் சமுதாயமும் உரத்துக்குரல் எழுப்பும் அளவுக்கு இந்தத்தீவு ஊடகங்களில் வெளிச்சமாகியது. இத்தனைக்கும் அங்கு ஒரு வெளிச்சவீடு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள், 20 இற்கும் மேற்பட்ட குளங்களின் பெயர்களுடன் இடங்கள். 20 இற்கும் மேற்பட்ட சனசமூகநிலையங்கள் ( வாசிகசாலைகள் உட்பட) பல கோயில்கள் எழுந்திருக்கும் புங்குடுதீவில், இதுவரையில் இல்லாதது ஒரு பொலிஸ் நிலையம்தான்.
கலை, இலக்கியம், இசை, ஊடகம், கல்வி, திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்ட பல ஆளுமைகளின் பூர்வீகமான பிரதேசம் புங்குடுதீவு. புங்குடுதீவு எனப்பெயர் தோன்றியதற்கும் பல கதைகள். இங்கு புங்கைமரங்கள் செறிந்து வளர்ந்தது காரணம் என்றார்கள். தமிழ்நாட்டில் புங்குடியூர் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், அங்கிருந்தும் மக்கள் இங்கு இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். தமிழக புங்குடியூரில் ஆங்கிலேயர்களுக்கு முற்பட்ட காலத்தில் இஸ்லாமியர்களினால் நிகழ்ந்த படையெடுப்பினால் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதற்கு இந்தத்தீவுக்கு வந்தனராம். முன்னர் பூங்கொடித்தீவு என்றும் பெயர் இருந்ததாம். ஒல்லாந்தர் இங்கு சங்கு ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் சங்குமாவடி என்றும் இந்த ஊருக்கு முன்னர் பெயர் இருந்ததாம். சப்ததீவுகளுக்கு மத்தியில் புங்குடுதீவு இருந்தமையால் – இதற்கு Middle Burg என்றும் ஒல்லாந்தர் பெயர் சூட்டியிருக்கின்றனர். இந்தத்தீவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் , ஆசிரியர்கள், பிரமுகர்கள் எனது நண்பர்களாகவிருந்தும் எனக்கு இந்த ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.