ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில் ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும் அறிவோம்.
ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டிருக்கும் பெர்லினில் வதியும் கருணாகரமூர்த்தியின் மற்றுமொரு வரவு அனந்தியின் டயறி. இதனை அவர் 16 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத்தொடங்கி , அவரது கணினியில் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, அந்தக்குறிப்புகளை இழந்துவிட்ட சோகத்தில் நெடுநாட்கள் இருந்தபொழுது, டயறிக்குறிப்புகளின் பாங்கில் வெளியான சில ஆங்கில தமிழ் நாவல்களைப் படித்ததும் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டு ஓடவும் இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.
காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலில் காலச்சுவடு ஸ்தாபகர் சுந்தரராமசாமியையும் தமது என்னுரையில் நினைவுபடுத்தியுள்ளார். சு.ரா. என இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் மிகவும் முக்கியமான படைப்பு. ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஒரு எழுத்தாளனைப்பற்றியது. ஆனால், அவனுடைய எழுத்துக்களை நாம் பார்த்திருக்கவில்லை. “தன் உள்ளொளியை காண எழுத்தை ஆண்டவன் அவன் ” என்றும் – அற்பாயுளிலேயே மறைந்துவிட்டான் எனவும் சொல்லியவாறு சு.ரா.வே கற்பனை செய்துகொண்டு எழுதிய புதினம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.