”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”
_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும், விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும் ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.