– திரைப்பட மேதை ஐஸன்ஸ்டைன் (Sergei Eisenstein) அவர்களின் ஆரம்ப கால மெளனத்திரைப்படமான “பாட்டில் ஷிப் பாட்டைம்கின்” (Battleship Potemkin) பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி ‘பாரதி’ சஞ்சிகையில் எழுதிய விமர்சனக்குறிப்பொன்றின் ‘போட்டோப்பிரதி’யொன்று அண்மையில் எமக்குக்கிடைத்தது. ’20 வருடங்களுக்கு முன் தயாரித்த இப்படம்’ என்று அ.ந.க இவ்விமர்சனத்தில் குறிப்பிடுவதிலிருந்து இக்கட்டுரை 1945இல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.ஒரு பதிவுக்காக அதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பதிவு செய்கின்றோம். –
1905இல் உலகம் முழுவதும் அதிரும்படியான ஒரு சேதியைப் பத்திரிகைகள் தாங்கி வந்தன. கொடுங்கோல் ஜார் மன்னனைக் கவிழ்த்து ரஷ்ஷிய பொதுஜனங்களின் ஆட்சியை நிறுவ அங்குள்ள மக்கள் நடத்திய முதலாவது மஹத்தான முயற்சி அது. இப்புரட்சியை பின்னால் 1917ல் நடந்த சோஷலிஸ மகா புரட்சிக்குப் பயிற்சிக்கூடமாக விளங்கியது என்று கூறுவார்கள் சரித்திரகாரர்கள். இந்த 1905ம் ஆண்டுப்புரட்சியின் நெஞ்சு சிலிர்க்கும் ஒரு கட்டத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்டது மெளனப்படமொன்று. 1925ல் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு பின்னால் உயர்தரமான பின்னணிச் சங்கீதத்தைச்சேர்த்தார்கள். ஐஸன்ஸ்டைன் (Eisenstein) என்ற உயர்தர சினிமாக் கலைமன்னன் இன்று உலக சினிமா அரங்கில் வகிக்கும் ஸ்தானத்திற்கு அடிகோலியது இதுதான். அமெரிக்கர், ஆங்கிலேயர் எல்லோரும் இன்று ஐஸன்ஸ்டைன் என்ற பட முத்திரையைக் கண்டதும் சினிமாக் கோபுரத்தினுச்சி மணி இது என்று முடிவு கட்டுகிறார்கள். அத்தகைய கற்பனா நிறைவு கொண்டது அவன் ‘டைரக்ஷன்’.