சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில், பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் பிறக்கின்றன் வாழ்கின்றன் இறக்கின்றன. மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழமுடியாது. பூமிக்கு இஃது ஒரு தனிச் சிறப்பாகும். இதனால் பூமியானது ஒரு பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லையெனில் அஃது ஒரு வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லையெனின் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ள புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை பிறப்பதும;, இறப்பதும் உலக நியதியாகும்.
பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் என்பர். அவன் அருவானவன்; உருவற்றவன். மனிதன்தான் அவனுக்கு உருவமைத்தவன். தன் சிந்தைக்கெட்டியவரை தன்னைப்போன்ற ஒரு மனித உருவமைத்துக் கடவுளுக்குக் கொடுத்தவன் மனிதன்தான். இறைவனுக்குப் பிறப்பு உண்டென்றால் அவனும் நம்மைப்போல் இறப்பவனாகி விடுவான் அல்லவா? எனவேதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிவபெருமான் பெயர் சொல்லி அழைக்காமல் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று கூறியுள்ளார். இன்னும் ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்பது அருணகிரியார் வாக்கு. பிறப்பும் இறப்பும் இல்லாதவனிடம் சென்று சேர்ந்தால் நமக்கும் பிறப்பும் இறப்பும் அறும் என்று கூறுகின்றார் பட்டினத்தார்.
‘பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடற்படாவகை காத்தல் நின் கடனே.’
பிறப்பு, இறப்புப் பற்றித் திருமூலர் கூறும் திருமந்திரங்களின் பாங்கினையும் காண்போம். ‘முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தவன்’ (20) என்றும், ‘பிறவா இறவாப் பெருமான்’ (25) என்றும், ‘பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னை’ (86) என்றும், ‘முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்… பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடு அறியீரே!’ (163) என்றும், ‘பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்’ (164) என்றும், ‘பிறப்பின் நோக்கம் பெருமானை வணங்குதல்’ (190) என்றும், ‘பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி’ (789) என்றும், ‘பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்’ (1524) என்றும், ‘இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி’ (1614) என்றும், ‘பிறப்பறியார் பல பிச்சைசெய் மாந்தர் … பிறப்பினை நீங்கும் பெருமை பெற்றாரே’ (1626) என்றும், ‘பிறவா நெறிதந்த பேரரு ளாளன்’ (1803) என்றும் கூறிய திருமூலர் முதல்வன் முக்கண்ணன் திருவடிக்கு எம்மையும் ஆற்றுப்படுத்திச் செல்கின்றார்.