அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.
கவிதை
‘போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது’
என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர். வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் ‘காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / ‘யுத்தம்.