நவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை!
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, கடந்த நூற்றாண்டின் நடுக்கூறான ஐம்பதுக்கு முற்பட்ட, பொழுதுபோக்குக் கதைக் காலத்துடன் ஆரம்பமானது. ஐம்பதுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது, மறுமலர்ச்சிக் காலமாகும். இதனைத் தொடர்ந்து அறுபதுகளின் ஆரம்பத்தில் தேசிய இலக்கியக் காலம் மூன்றாவது காலகட்டமாக முகிழ்த்தது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களைத் துணிச்சலுடன் முரசறைந்து பிரகடனஞ்செய்த இக்காலகட்டத்தில் முளைதள்ளிச் செழித்து வளர்ந்து, பல நல்ல கதைகளை எமக்களித்த ஒரு மூத்த படைப்பாளி, அன்பு நண்பர் ப. ஆப்டீன் அவர்கள். ‘கொங்காணி’ எனும் இத்திரட்டு, நண்பர் ஆப்டீன் அவர்களது 12 கதைகளைக் கொண்டது. இவற்றுள் அநேகமானவை பல்வேறு சஞ்சிகைகளில் நான் ஏற்கனவே உதிரிகளாகப் படித்தவை. ஆயினும் இவ்வாறு ஒரு திரட்டாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது; அது ஒட்டுமொத்த அபிப்பிராயம் சொல்ல வசதியானது. மேலும், நண்பர் ஆப்டீன் அவர்களது படைப்பாளுமையின் அடையாளம் எனும் வகையில் இத்திரட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நண்பர் ஆப்டீன் அவர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு படைப்பாளி; பழகுவதற்கு இனிமையானவர்; பண்பானவர். எனது சுமார் ஒருவருடகால நட்புறவாடலின் கண்டுபிடிப்புக்கள் இவை. ‘இவைதவிர்ந்த அவரது இன்னொரு முகத்தை, இப்பன்னிரண்டு கதைகளூடாகக் கண்டேன்’ என்பது பச்சைப் பொய்! அவருக்குள் உள்ளது ஒரேயொரு முகம் மட்டுந்தான். அந்த முகத்தையே இக்கதைகள் பூராவும் நான் காண்கிறேன். ஆக, தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களது அன்றாட வாழ்வின் அவலங்களையும், அற்புதங்களையும் கண்டு சிலிர்க்கும் தமது சொந்த முகத்தையே இக்கதைகள் வழியாக அவர் காண்பித்திருக்கின்றார்.