(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)
இந்தத் தலைப்பு பரந்துபட்ட ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான காரியமல்ல. ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக் கொண்டது என்பதை பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார் ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய சரசோதிமாலை என்ற சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது. 15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின. செய்யுள் மரபு கைவிடப்பட்டு உரைநடை மரபு செல்வாக்குப் பெற்றது. அச்சு இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.
ஈழநாட்டில் இடம்பெற்ற இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர். தமிழ் நாட்டுக்குச் சென்று தமிழ்வளர்த்து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்
மங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதயம் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.
மறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.
“முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல். ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற ஒரு தன்மையைக் காண்கிறோம்” எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.