சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..

எழுத்தாளர் க.நவம்சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..போர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர்  மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.

ஈழப்போர்க்கால இலக்கியத்தின் புதுவரவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்களது ‘காண்டாவனம்’ எனும் சிறுகதைத் திரட்டின் முதல் (வட அமெரிக்க) பதிப்பு, அவரது புதல்வர்கள் வித்தியானி, மகரிஷி ஆகியோரது முயற்சியில், கலிஃபோர்னியாவிலுள்ள iPMCG Inc. வெளியீடாக மார்கழி 2014இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரதி ஒன்று எனது கையை வந்தடையக் காரணமாயிருந்தவர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். ‘சசி’ என்று நண்பர்களாலும், ’ஸ்டீஃபன் மாஸ்ரர்’ என்று மாணவர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும், ஊரவர்களாலும் அழைக்கப்பட்டுவந்த சண்முகம் சிவலிங்கம் எனது நண்பர்; சக ஆசிரியர். இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனை நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் கடந்த எழுபதுகளில் இருவரும் அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். அறிவியல் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தோம். மாணவர் மன்றம் அமைத்து, இலக்கியம் தொடர்பான வாசிப்புக்கள், உரையாடல்கள், சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாடகங்களைத் தயாரித்தோம். கலை இலக்கிய நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தினோம். சமூகம், அரசியல், இலக்கியம் உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து எமக்குள் விவாதித்தோம், உரையாடினோம்; உடன்பட்டோம், முரண்பட்டோம் – நல்ல நண்பர்களாக.  

இலங்கையின் வடபிரதேசத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊரைத் தவிர, கிழக்கு மாகாணத்தையும், கண்டி, பேராதனை நகரங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தையுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிரதேசங்களெனக் குறிப்பிட்டுச் சொல்வேன். கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில், நான் கடமையின் நிமித்தம் சில வருடங்கள் வாழ்ந்துவந்த கல்முனையும் ஒன்று. காண்டாவனம் கதைத் திரட்டினூடாக, சுமார் 40 வருடங்களின் பின்னர், மீண்டும் ஒருமுறை கல்முனை போய்வந்தேன். வங்கக் கடலும், கரைமணலும், வானுலவும் வட்ட நிலவும், வாடிவீடும், வயல்வெளியும், சம்பா அரிசியில் சமைத்த சோறும், கஜுவும், கட்டித் தயிரும், கைத்தறி ஆடைகளும், வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாய் வாழும் சனசமூகங்களும் மீண்டும் என் மனக்கண் முன்னே வந்து போயின. எனக்குப் பிடித்தமான, கிழக்கு மாகாணப் பேச்சுமொழி, கலை, பண்பாடு, விருந்தோம்பல், வாழ்க்கைமுறை என்பன மீண்டும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. எனக்குத் தெரிந்தவர்கள், என்னோடு பழகியவர்கள், எனது  நண்பர்கள் சிலர்கூட, காண்டாவனம் கதை மாந்தர்களாக வந்து போயினர்.

Continue Reading →