‘ழகரம் 5’ சிற்றிதழ் சஞ்சிகை வெளியீட்டில் எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் சில நிமிடங்கள்…

எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் ‘ழகரம்’ சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.


நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.


நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், ‘காலம்’ செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் ‘தீபம்’ சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.

Continue Reading →