ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் ‘மனக்கண்’ கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான ‘மனக்கண்’ நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.
இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான ‘நாவல் கூறும் பொருள்’ என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் ‘மனக்கண்’ நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.
மலரின் முதலாவது கட்டுரையான ‘தமிழ்நதி’யின் ‘எழுத்தின் பாலினம்’ இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender) காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.
உதாரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி.எஸ்.நைபாலின் பின்வரும் கூற்றுடன் கட்டுரை ஆரம்பமாகின்றது: