தமிழின் வரப்பிரசாதம் தமிழர் வாழும் பரப்பெல்லை விரிவுபட்டுள்ளது. இன முரண்பாடு உள்ளக வெளியக இடப்பெயர்வுகளை அதிகமான மக்களை பெயர்த்திருக்கிறது அல்லது வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின் பரப்பளவின் அதிகமும் அதிகமாக அவர்களுக்கிடையேயான மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின் மேலோங்கிய பயிற்சி கைகளுக்குள் உலகையே கொண்டு வரும் கணினியியல் நெறிகளின் கற்கைகள் ஒவ்வொரு வரும் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.
இங்கு பன்முக அளுமை மிக்க படைப்பாளிகளும் அபரிமிதமாக தங்களை இனங்காட்டியே வந்துமுள்ளனர். இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ். சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிபோவது அதிசயம் தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கைகள்,விருப்புக்கள்,கனவுகள்,தன் மீதான கழிவிரக்கம்,தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம்,தாயின் ஸ்பரிசம்,கற்பனை வெளியில் தானே துள்லி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும்,பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை,உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.
“ஏகாந்த காற்றில்
பறக்கும்
பால்யத்தின் நினைவுகள்
றெக்கை முளைத்த சருகுகளாய்.”
ஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.
“ஒரு கோப்பைத் தேநீரை
என் இதழ் கேட்கும் சூட்டோடு
சினேகிதமாய் பருகிக் கொண்ருந்தேன்.
வெளியில் பொழிகிறது மழை
என் தேநீர்க் கோப்பையை
நிறைக்கும் வரை”