1. முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் அச்சமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக அணங்கு, விலங்கு, கள்வா், தம்இறை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் அச்சத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.
1.1 அச்சம் தோன்றும் களன்கள்
அச்சமெனும் மெய்ப்பாடு தோன்றம் களத்தை தொல்காப்பியா்,
”அனங்கே விலங்கே கள்வா்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொ.மெ.நூ.8)
எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.
1.2 உரையாசிரியா்களின் பார்வையில் மருட்கை
அச்சம் அஞ்சத் தருவனவற்றாற் பிறப்பது. (இளம்.மெய்.நூ-3) என இளம்பூரணரும்; அச்சமென்பது பயம் (பேரா.மெய்.நூ-3) என பேராசிரியரும்; அச்சமாவது பருவரலிடும்பை நேருங்கொல் என எண்ணி உள்ளம் மெலிதலாகும். பயம் என்பது உலகவழக்கு (ச.பாலசுந்தரம், மெய், நூ-3) என பாலசுந்தரனாரும் உரை கொண்டுள்ளனா். இதன்வழி, அச்சமென்பது அஞ்சத்தகுவன கண்டு அஞ்சுதலும் அஞ்சதகுவன ஏற்படுமோ என எண்ணியவழி அஞ்சுவதலுமாகும். இதனை பயமென்றும் கூறுவா் என்பது அறியப்படுகிறது.
1.2.1. அணங்கு
அணங்கென்பன பேயும், பூதமும், பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயபாலரும் பிறரும் அணங்கு தற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயிணாரும் உருமிசைத் தொடக்கத்தனவுமெனப்படும் (பேரா.மெய்.நூ-8) என பேராசிரியரும்; கட்புலனாகாமல் தம் ஆற்றலாறீண்டி வருத்தும் சூர் முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம் (ச.பாலசுந்தரம், மெய். நூ-8) என ச.பாலசுந்தரனாரும் உரை கொள்வா். இதன்வழி அணங்கென்பது பேய், பூதம், பாம்பு, வருத்தத்தை ஏற்படுத்தும் தெய்வம் முதலாயினவும் பிறவுமாம் என்பது அறியப்படுகிறது. இளம்பூரணர் உரை கூறவில்லை. இதனை விளக்க ச.பாலசுந்தரனார்,