அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி….

பொன் குலேந்திரனின் 'காலம்' தொகுப்பு.– தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் ‘காலம்’ (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. –

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. “இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை.” என்றும் “மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20” என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.

Continue Reading →

திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “சூழல் அறம்“

சுப்ரபாரதிமணியன்திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று  நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:

“இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.

பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.

Continue Reading →

மலேசியாவில் சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ‘கடவுச்சீட்டு’ வெளியீடு!

சுப்ரபாரதிமணியன்சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்   ‘கடவுச்சீட்டு’ மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன் (தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்)  அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்  ஜலான் ஈப்போவில் – நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர். நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்  அவர்கள் பேசினார். அவர் தனதுரையில் “சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக  ‘கடவுச்சீட்டு’  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது. ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின்   ‘பால் மரக்காட்டினிலே’ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.

Continue Reading →