வாசிப்பும், யோசிப்பும் 268 (முகநூற் பதிவொன்றும் சில எதிர்வினைகளும்): யோ. புரட்சியின் ‘செஞ்சோற்றுக்கடன்” கவிதை பற்றி…

- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் யோ.புரட்சி பதிவிட்டிருந்த முகநூற் பதிவினைப்பார்த்தேன். இது ஒரு கவிதை. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகளை விபரிக்கும் கவிதை. யோ.புரட்சியும் படையினரின் தாக்குதல்களுள்ளாகிக் காயம் பட்டவர்களிலொருவர். அச்சமயம் அவருக்கு , அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எவ்விதம் உயிரைப்பணயம் வைத்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் உதவினார்கள் என்பதை இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. கவிதையென்பதின் வெற்றியானது அதனைப்படைத்தவரின் புலமைச்சிறப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எத்தனையோ, படைத்தவரின் புலமையினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல படிப்பவரின் உணர்வுகளில் எவ்விதப்பாதிப்புகளையும் ஏற்றும் வலிமையற்று காலத்தில் காணாமல் போய் விடுகின்றன. சிறந்த கவிதையின் வெற்றியென்பது அதனைப்படைத்த கவிஞரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சியின் வெளிப்பாடாக வெளிப்படும் கவிதையே வாசிப்பவரின் உணர்வுகளையும் பாதித்து , காலத்தில் நிலைத்து நின்று விடுகின்றது. யோ.புரட்சியின் இக்கவிதை அத்தகைய கவிதைகளிலொன்று. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் அடைந்த உணர்வுகளின் உண்மையின் உண்மையான வெளிப்பாடாகவிருப்பதால் , வாசிப்பவரின் நெஞ்சங்களை ஒரு கணம் அசைத்து விடுகின்றது. நிலவிய மானுடத் துயரங்கள் வாசிப்பவர் நெஞ்சங்களில் வலியை ஏற்படுத்துகின்றன. மானுடர்கள் மட்டுமல்லர் மிருகங்கள் கூடத் தம் அன்பை வெளிப்படுத்துகின்றன. அக்காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளிலொன்றாகவும் இக்கவிதை விளங்குகின்றது.

“யாருமருகில்இல்லாவேளை, காலதிலே எறிகணைபட்டு”க் கவிஞர் காயமுற்றவேளை, “தன்னாடை தன்னில், சிறுதுண்டு கிழித்து”க் கவிஞரின் குருதிப்பெருக்கைத்தடுத்த ஏழைத் தமிழ்த்தாய், “தாய்தன்னை இழந்த, தளிர்தன்னைக் கண்டு, யார் பிள்ளை எனும் கேள்வியது கேளாது தன்முலை தனையூட்டி வன்பசி தீர்த்த” நல்மனமுள்ள பெண், “அனைத்துறவும் இழந்து, அம்பலவன் பொக்கனையில் அந்தரித்த வேளையிலே அருகேயோர் உறவாகி” அன்புதனை அளித்துக் கவிஞருக்குக் கருணை காட்டிய ஜிம்மி என்னும் நாய், ‘முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்கள். ‘பதுங்கு குழிக்கு உரப்பையின்றி பாடுபட்ட நாட்களிலே பழஞ்சேலை’ தந்துதவியவர்கள், ‘பதுங்கு குழியில் இடம்தந்து பாசமொடு கஞ்சிதந்து நேசமாய்’ அணைத்தவர்கள்…… .. இவ்விதம் தாம் அந்தரித்த வேளையிலும் மானுட நேயம் காட்டிய, மிருக நேயம் காட்டிய உயிர்களையெல்லாம் இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. அதனாலேயே வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தும் சிறப்பு மிக்கதொரு கவிதையாகவும் இக்கவிதை விளங்குகின்றது. கவிதையின் முழு வரிகளும் கீழே:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 267: முகநூற் பதிவுகள் சிலவும், எதிர்வினைகளும்..

- வ.ந.கிரிதரன் -– அண்மையிலிட்ட முகநூற் பதிவும் சிலவும், அவற்றுக்கான எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவிடுகின்றேன். –

1. நினைவு கூர்வோம்: மகத்தான அக்டோபர் புரட்சி (நவம்பர் 7, 1917)

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! ” – பாரதியார் –

இந்தப்புரட்சி ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது? விளாடிமீர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளால் ரஷ்யாவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பு முதல் முறையாக ஒரு நாட்டில் முழுமையாக நிறுவப்பட்ட தினம் என்பதால்தான். கார்ல் மார்க்ஸ் தனது இடையறாத ஆய்வுகள் மூலம் மானுட உலகுக்கு வழங்கிய மகத்தான மூலதனம் அவரது மூலதனம் என்னும் ஆய்வு நூலே. பல்வேறு பிரிவுகளால் (மதம், மொழி, இனம், வருணம், வர்க்கம் போன்ற) பிளவுண்டு, துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மானுட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வானது அரசு உலர்ந்து உக்கி விட்ட, வர்க்கங்களேதுமற்ற கம்யூனிசச் சமுதாய அமைப்பிலேயே இருக்குமென்னும் தன் கனவைத் தன் ஆய்வுகள் மூலம் நிறுவிப் படைத்திட்ட நூல்தான் இந்த மூலதனம்.

மார்க்ஸின் கனவை, ஆய்வுகள் மூலம் நடைமுறைச்சாத்தியமான கனவு என்று எடுத்துக்காட்டிய கனவினை இம்மண்ணில் பொதுவுடமை அமைப்பொன்றினை நிறுவியதன் மூலம் மார்க்ஸின் கனவின் முதற் கட்டத்தினைச் சாத்தியமாக்கியவர் விளாடிமீர் லெனின். இப்புரட்சியின் முக்கியத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிந்து, ஆதரித்துக் கவிதை பாடிய இலக்கியவாதி மகாகவி பாரதியார். அவரது ‘ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதை.

Continue Reading →