ஜெயகாந்தன் மறுவாசிப்பு: மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்!

ஜெயகாந்தன்ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு நேற்று முன்தினம் மெல்பனில், இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது. அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.

ஜெயகாந்தன் வாழும்போதே ( அவர் நீண்ட காலம் எழுதாமலிருந்தமையால்) எழுத்துலகிலிருந்து மறைந்துவிட்டதாகவும் பத்திகளில் பறைசாற்றி, வித்துவம் காட்டிக்கொண்டிருந்தவர்களை, அவ்வாறு எழுதவைத்ததன் மூலம் தன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்துக்கொண்டிருந்தவரைப்பற்றி, அவர் வாழும்போதும் மறைந்த பின்னரும் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன். எனவே எனது தரப்பில் அவர் குறித்து புதிதாக எழுதுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைப்புடன்தான் மெல்பனில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வதியும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன். அங்கு சென்ற பின்னர்தான், ஜெயகாந்தனை இன்னமும் மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும் சிலரையும் முதல் முதலில் சந்திக்கவும் நேர்ந்தது. அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகர் வட்டத்தின் அன்றைய சந்திப்பில் முதல்தடவையாக கலந்துகொண்டபோது, ஜெயகாந்தன் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய மூன்று சிறுகதைகளையே வாசிப்பு அனுபவப்பகிர்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தமையும் தெரியவந்தது. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கதைகள் அவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் எழுதிய கதைகள். ஆறுதசாப்தங்களையும் கடந்து ஜெயகாந்தன் பார்த்தறியாத ஒரு ஊரில் பேசப்படுகிறது என்றால், அந்த ஆளுமையின் மேதாவிலாசம் எத்தகையது…? இந்தக்கொடுப்பினை எத்தனை நவீன இலக்கியப்படைப்பாளிகளுக்கு கிட்டும்? ஜெயகாந்தனை மறுவாசிப்புச்செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் எதுவுமே பேசாமல் ஜெயகாந்தனின் மொழியில் மெளனமே பாஷையாக இருந்துவிட்டு எழுந்துவருவதற்காகத்தான் சென்றேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ”இறுதி மணித்தியாலம்”

நூல்  : இறுதி மணித்தியாலம்.- மேமன்கவி -ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக”இறுதி மணித்தியாலம்” எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன  கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.  மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.   அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: நற்றிணையில் புற விழுமியங்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.

சங்க காலத்தை ஆண்ட அரசன், வள்ளல், வீரன் பற்றிய செய்திகள்
நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும் அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் தம் நாட்டு மக்களுக்காக எதிரி நாட்டுடன் போர் புரிந்துப் பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி வறியவர்களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும் தம் மக்களையும் செழுமையுடனும் சீரும்சிறப்புமாக வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின்வழி அறியமுடிகிறது.

தித்தன் என்னும் சோழ மன்னன் உறையூரை ஆட்சி செய்தான் என்பது “வீரை வேண்மான் வெளியன் தித்தன்” (நற்.58) என்னும் பாடலடி விளக்குவதைப் பார்க்க முடிகிறது. மேலும்,

“எழுது எழில் சிதைய அமுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்” (நற்.379) என்ற பாடலடி தலைவியின் கண்களுக்கு சோழனின் குடைவாயிலில் உள்ள ஊரில் இருக்கின்ற நீல மலரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.அதுமட்டுமன்று,தலைவியின் கைகள் சிவந்திருத்தலைப் பாண்டிய மன்னனின் பொதியலில் பூத்த காந்தள் மலரைப் போன்று சிவந்தன என,

“மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே” (நற்.379)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.சோழன் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையும் கொண்டவர் என்று “படுமணி யானைப் பசும்பூட் சோழர்”(நற்.227)என்னும் பாடலடி விளக்குகின்றது.இப்பாடல்களின் வழி மன்னர்கள் சங்க காலத்தை ஆண்டு வந்தனர் என்றும் அவர்கள் செல்வ செழிப்புடன் நாட்டை வளர்த்தும் வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது.

Continue Reading →