வ.ந.கிரிதரன் கவிதைகள் 28: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!இவை ‘பதிவுகள்’, ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளியானவையே. சில ‘பதிவுகளி’ல், ஏனையவை ஈரிதழ்களிலும் வெளியானவை. மீண்டும் இவற்றை வாசித்தபோது பல கவிதைகளின் அடி பிரிப்பு எனக்கு உவப்பானதாகவிருக்கவில்லை. அவை வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை அவ்வடிப்பிரிவுகள் தடுப்பதுபோல் உணர்ந்தேன். அவ்விதமான கவிதைகள் பலவற்றை மீண்டும் வேறொரு வகையில் அடி பிரித்து ஒழுங்காக்கியுள்ளேனே தவிர ஏற்கனவே எழுதிய சொற்களெவற்றையும் திருத்தியோ அல்லது மாற்றியோ அமைக்கவில்லை. இவை என் உணர்வுகளை , தேடல்களை, எண்ணப்போக்குகளை விபரிப்பன. உங்களுக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகின்றேன். இவற்றை விரைவிலொரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

Continue Reading →

ஆய்வு: அகநானூறு – பெண், ஆண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அகநானூறு திணையும், திணைக்குரிய துறைக்குறிப்பும் செவ்வனே பெற்றுள்ளது. இருப்பினும் சில பாடல்களின் துறைக்குறிப்புகள் திணைக்குப் பொருத்தமில்லாததாகவும் உள்ளன. இதை முதற்பொருள், கருப்பொருள். உரிப்பொருள் அடிப்டையில் நிறுவலாம். எனினும் இக்கட்டுரை அகநானூற்றுப் பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் ஆண் புலவர்களின் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் வேறுபாடு உள்ளதா? என்பதை ஆய்வுச் சிக்கலாகக் கொண்டு அகநானூற்றுப் பெண் புலவர்களின் துறைக்குறிப்புகள் மட்டும் ஆராயப்படுகின்றன. பெண், ஆண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் கீழ்க்காணுமாறு உள்ளன.

அகநானூற்றுப் பெண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள்

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
1. வரைந்து எய்திய பின்றை மண மனைக்கண் சென்ற தோழிக்கு
தலைமகள் சொல்லியது (அகம். 352)

வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம் (மேலது )

2. ஒக்கூர் மாசாத்தியார்
1. வினைமுற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
(அகம். 324)
2. வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு உழையர் சொல்லியது. (அகம். 384)

3. ஔவையார்
1. தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. (அகம்.11)
2. செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது (அகம்.147)
3. பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது. (அகம்.273)
4. தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (அகம்.303)

Continue Reading →

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்

அமரர் காரை. சுந்தரம்பிள்ளை– 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை –

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

Continue Reading →

அஞ்சலி: மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று மட்டக்களப்பில் மறைந்தார்!

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

Continue Reading →