மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ! மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.
‘நாங்கள்தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம்! சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?”
எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து.. இருபது மைல் வரை அலைந்திருக்கிறார். அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளராதிருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம். பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். இளைப்பாற வேண்டும். ‘ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்!” எனக் காலையில் புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளவில்லை. மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூச்செடுக்கக் கஷ்டப்படுகிறாள். நெஞ்சுவலி.. இருக்க, எழும்ப யாராவது பிடித்துவிடவேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பதுபோலத்தான் நடக்கமுடிகிறது. இப்படியே விட்டால் என்ன செய்யுமோ என அவருக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ? நல்ல ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் அவளைக் காட்டவேண்டும். மருந்து எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்! பல இடங்களிலும் அலைந்து.. இறுதி முயற்சியாக, தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.
‘என்ன அப்பு.. இந்த நேரம்?”
விஷயத்தைச் சொன்னார்.
‘ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டால் பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்!”
Continue Reading →