– தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் ‘காலம்’ (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. –
அறிவியல் புனைகதை (Science Fiction) என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் , உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.
பொன் குலேந்திரன் அவர்கள் ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள். அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. “இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை.” என்றும் “மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20” என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.