கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது. இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன். சுநாமியின்போது மௌனகுரு – சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில் கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார்.
அந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். “வேண்டாம். தொடருங்கள்” எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார். அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல் மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள். அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம் தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.”சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே” என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம். சங்காரம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது. தலைமை வகித்தவர் கி. இலக்ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன், பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.
அன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம். அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அசாதாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார். பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.