– அண்மையில் ‘நான்காவது பரிமாணம்’ பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஷியாமளா நவம் அவர்களின் நூலான ‘இயற்கையுடன் வாழுதல்’ தொகுப்பு நூலில் உடல் நலம், மக்கள் நலம் போன்ற விடயங்களையொட்டிய , அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய கட்டுரைகளுள்ளன. இகட்டுரைகள் ஏற்கனவே ‘டொராண்டோ’வில் வெளியாகும் சஞ்சிகைகளில் வெளியானவைதாம். அவை மக்களின் நன்மை கருதிப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகின்றன. –
“Let food be thy medicine and medicine be thy food.” – Hippocrates-
‘உணவே மருந்து’ எனும் உண்மையை மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரஸ் பல நூறாண்டுகளுக்கு முன்பே கூறிப்போயிருக்கின்றார். இதனை உணராது, உணவினால் நோயின்றி வாழ்வதை விடுத்து, வெறும் இரசாயன உற்பத்திகளை மருந்துகளாகவும் உணவுகளாகவும் உள்ளெடுத்து, நோய்நொடிகளை விலைக்கு வாங்கிக்கொள்பவர்களும் – உயிர்வாழ்வதற்காக உணவருந்தாமல், உணவருந்துவதற்காகவே உயிர்வாழ்பவர்களும் பல்கிப்பெருகிக் காணப்படும் கலிகாலமிது! உணவு என்பது ருசிக்கு மட்டும் உரியதல்ல. உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், மனநிலை, குணநலன்கள் அனைத்தும் இவ்வுணவுடன் சம்பந்தப்படுபவையாகும். ஒவ்வொரு நேர உணவும் எமது இரண்டங்குல நாக்கினைத் தாண்டியதும், அகத்துறிஞ்சும் சுமார் 22 அடி நீளமான சிறுகுடல் கடந்து, கழிவகற்றும் பெருங்குடல் வரை ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஊர்ந்து சென்று பயனளிக்கிறது. இந்த உணவின் உற்பத்தியும் பதப்படுத்தலும் வகைத்தெரிவுகளும் அளவுகளுமே பெருமளவில் அதன் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கின்றன.
ரொறன்ரோ பொது ஆரோக்கியப்பகுதியினரும், தேசிய கனேடிய ஆரோக்கியப்பிரிவினரும், வேறுபல நிறுவனத்தினரும், சத்துணவியலாளர்களும் மக்களுக்குப் பலதரப்பட்ட உணவு வழிகாட்டல்களை ‘வானவில்லின் வர்ணங்களில்’ வழங்கியுள்ளனர். இந்நாட்டில் வாழும் பல்லின மக்களது பாரம்பரியங்களுக்கும் கலாசாரங்களுக்கும் ஏற்பவே இந்த வழிகாட்டல்கள் வரையறுக்கப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு, இன்றைய அவசர – நாகரிக உலகின் நடைமுறைகளை நாம் கண்மூடித்தனமாகக் கைக்கொண்டு வாழ்ந்துழல்கின்றோம். வானவில்லின் வர்ணங்கள் உணவுத் தேர்விலும் உண்டு என்பதைக் கவனத்திலெடுத்து, பலசரக்குக் கடைகளிலும் காய்கறிக் கடைகளிலும் வெளியே உணவருந்தும்போதும் இந்த வர்ணங்களையும் சில உணவு வரன்முறைகளையும் மனதிற்கொண்டு தெரிவுகளையும் அளவுகளையும் தீர்மானிப்பது எமது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைச் சுட்டிக்காடுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.