– கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. – பதிவுகள் –
‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.
எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.
மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.
கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.