கடந்த ஞாயிறன்று (29.10.201) மாலை ‘விம்பம்’ அமைப்பினரால் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள TMK house இல் trance – உரு குறுந்திரைப்படம் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஞானதாஸ் காசிநாதர், ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஆகிய இருவருடனும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. வழமைக்கும் மாறாக அதிகமானோர் கலந்து கொண்ட அந்நிகழ்வானது அக்குறும்படம் மீதான பல்வேறு பட்ட விமர்சங்களுடனும் பார்வைகளுடனும் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போர் தந்த வழியில் இருந்து இன்னமும் மீளாத ஈழத்தில் போர்க்காலக் கட்டத்தில் காணாமல் போன தனது மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு தாயின் துயரக் குரலாக அமையும் இக் குறும்படமானது போருக்கும் அப்பால் சாதாரண மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் பற்றி அதிகம் பேசுகின்றது. ‘உரு’ என்ற சாமியாடல் முறைமையையும் அச்சாமியாடலின் மூலம் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையையும் பேசு பொருளாகக் கொண்டு அதன் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக அமைந்திருக்கும் இக்குறும்படமானது எம் முன் வைக்கும் கேள்விகள் ஆயிரம்.
இக்குறும்படத்தின் வெளியீட்டின் பின்னான கலந்துரையாடலில் ஞானதாஸ் காசிநாதர் அவர்கள் “போரின் வலியினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் அனைவருக்கும் மேற்கத்தைய முறைமையில் அமைந்த உளவளச்சிகிச்சை பெறுவதற்குரிய போதுமான வசதிகள் இன்றில்லை. இவ்வகையில் இத்தகைய சாமியாடல் முறையும் தீர்க்கதரிசனங்களும் அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் பெரிதும் உதவி புரிகின்றன” என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். அத்துடன் அரங்கில் இருந்த பெரும்பான்மையோரும் ‘உரு’ என்ற சாமியாடல் முறையையும் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையிலும் மிகவும் உண்மை இருப்பதாகவே தமது நம்பிக்கையினை வெளிப்படுத்தினர். இவர்கள் மட்டுமன்றி இன்று தற்போது ஈழ இலக்கியத்தில் காத்திரமாக இயங்கி வரும் பெரும்பாலான படைப்பாளிகளும் சாமியாடல்களிலும் சாமிமார்கள் கூறும் தீர்க்கதரிசங்களில் அதிக நம்பிக்கையினையே தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ‘கனவுச்சிறை’ இல் தேவகாந்தனும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ இல் யோ.கர்ணனும் ‘பெர்லின் நினைவுகள்’ இல் பொ.கருணாகரமூர்த்தியும் இத்தகைய பாத்திரங்களை உலவ விட்டு இவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போன்ற தமது கருத்தினை அப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வழக்கானது எமது மண்ணில் தொன்றுதொட்டே பாரம்பரியமாக இருந்து வருவதனால் இவர்கள் மனங்களிலும் ஆழ ஊடுருவியுள்ளதையே வெளிப்படுத்துகின்றன. ஆயினும் பல தசாப்தகாலங்களாக ஈழ இலக்கிய உலகில் அரசோச்சிய இடதுசாரி இலக்கியவகையில் இவை போன்று குறிப்புகளோ நம்பிக்கைகளோ எதுவும் இல்லை. இது போன்ற நம்பிக்கைகள் இன்று எமது இலக்கியங்களிலும் படைப்புக்களிலும் அதிகம் வேரூன்றுவதற்கு எமது இலக்கிய உலகில் பின் கதவு வழியாக உள் நுழைந்த பின்நவீனத்துவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது எமது அனுமானம் ஆகும்.