– 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை –
அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.
காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.
Continue Reading →