ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், ” கனவு காணுங்கள்” எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்…? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர். கனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.
எங்கள் மத்தியில் கலை, இலக்கிய ஆர்வலராகவும், பட்டிமன்ற பேச்சாளராக மேடைகளை கலக்குபவராகவும், புகலிடத்தில் எமது இளம் தலைமுறைக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில் அர்ப்பணிப்புள்ள தொண்டராகவும் விளங்கும் எமது இனிய நண்பர் திருநந்த குமார் அவர்கள் சிறுபராயத்தில் எத்தகைய கனவுகளை கண்டார்..? என்பது எமக்குத்தெரியாது. அவரது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர் சமுதாயத்தில் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று எத்தகைய கனவுகளை கண்டனர்…? என்பதும் தெரியாது. ஆனால், பாடசாலைப்பருவத்தில் திருநந்தகுமார், பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால், ” இவர் எதிர்காலத்தில் ஒரு இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக வரக்கூடும் என்றுதான் எண்ணியிருப்பார்கள் எனச் சொல்லத்தோன்றுகிறது. ” விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்று முன்னோர்களும் சொல்லிவிட்டுச்சென்றமையால் இந்தக்கனவுகள் பல்வேறு பரிமாணங்களை பெறுகின்றன.
தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எமது நண்பர் திருநந்தகுமார் அவர்களுக்கு தற்பொழுது மணிவிழாக்காலம் என அறிந்தமையால், ஆளுமைகள் பற்றிய எனது தொடர்பத்திகளில் அவர் பற்றியும் எனது அவதானங்களையும் பதிவுசெய்யவிரும்பினேன். இலங்கையில் அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்தே அவருடனான எனது நட்புறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிக்கிறது.