– எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற் பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால் `பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் –
மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.
தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது? அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் – ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.
Continue Reading →