ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு நேற்று முன்தினம் மெல்பனில், இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது. அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.
ஜெயகாந்தன் வாழும்போதே ( அவர் நீண்ட காலம் எழுதாமலிருந்தமையால்) எழுத்துலகிலிருந்து மறைந்துவிட்டதாகவும் பத்திகளில் பறைசாற்றி, வித்துவம் காட்டிக்கொண்டிருந்தவர்களை, அவ்வாறு எழுதவைத்ததன் மூலம் தன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்துக்கொண்டிருந்தவரைப்பற்றி, அவர் வாழும்போதும் மறைந்த பின்னரும் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன். எனவே எனது தரப்பில் அவர் குறித்து புதிதாக எழுதுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைப்புடன்தான் மெல்பனில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வதியும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன். அங்கு சென்ற பின்னர்தான், ஜெயகாந்தனை இன்னமும் மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும் சிலரையும் முதல் முதலில் சந்திக்கவும் நேர்ந்தது. அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகர் வட்டத்தின் அன்றைய சந்திப்பில் முதல்தடவையாக கலந்துகொண்டபோது, ஜெயகாந்தன் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய மூன்று சிறுகதைகளையே வாசிப்பு அனுபவப்பகிர்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தமையும் தெரியவந்தது. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கதைகள் அவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் எழுதிய கதைகள். ஆறுதசாப்தங்களையும் கடந்து ஜெயகாந்தன் பார்த்தறியாத ஒரு ஊரில் பேசப்படுகிறது என்றால், அந்த ஆளுமையின் மேதாவிலாசம் எத்தகையது…? இந்தக்கொடுப்பினை எத்தனை நவீன இலக்கியப்படைப்பாளிகளுக்கு கிட்டும்? ஜெயகாந்தனை மறுவாசிப்புச்செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் எதுவுமே பேசாமல் ஜெயகாந்தனின் மொழியில் மெளனமே பாஷையாக இருந்துவிட்டு எழுந்துவருவதற்காகத்தான் சென்றேன்.