அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்

அமரர் காரை. சுந்தரம்பிள்ளை– 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை –

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

Continue Reading →

அஞ்சலி: மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று மட்டக்களப்பில் மறைந்தார்!

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

Continue Reading →

உருவின் உண்மை உருவம்: காசிநாதர் ஞானதாசின் ‘trance’ குறும்படம் குறித்த ஒரு பார்வையும் சில பதிவுகளும்

உருவின் உண்மை உருவம்: காசிநாதர் ஞானதாசின் ‘trance’ குறும்படம் குறித்த ஒரு பார்வையும் சில பதிவுகளும்கடந்த ஞாயிறன்று (29.10.201) மாலை ‘விம்பம்’ அமைப்பினரால் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள TMK house இல் trance – உரு குறுந்திரைப்படம் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஞானதாஸ் காசிநாதர், ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஆகிய இருவருடனும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. வழமைக்கும் மாறாக அதிகமானோர் கலந்து கொண்ட அந்நிகழ்வானது அக்குறும்படம் மீதான பல்வேறு பட்ட விமர்சங்களுடனும் பார்வைகளுடனும் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போர் தந்த வழியில் இருந்து இன்னமும் மீளாத ஈழத்தில் போர்க்காலக் கட்டத்தில் காணாமல் போன தனது மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு தாயின் துயரக் குரலாக அமையும் இக் குறும்படமானது போருக்கும் அப்பால் சாதாரண மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் பற்றி அதிகம் பேசுகின்றது. ‘உரு’ என்ற சாமியாடல் முறைமையையும் அச்சாமியாடலின் மூலம் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையையும் பேசு பொருளாகக் கொண்டு அதன் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக அமைந்திருக்கும் இக்குறும்படமானது எம் முன் வைக்கும் கேள்விகள் ஆயிரம்.

இக்குறும்படத்தின் வெளியீட்டின் பின்னான கலந்துரையாடலில் ஞானதாஸ் காசிநாதர் அவர்கள் “போரின் வலியினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் அனைவருக்கும் மேற்கத்தைய முறைமையில் அமைந்த உளவளச்சிகிச்சை பெறுவதற்குரிய போதுமான வசதிகள் இன்றில்லை. இவ்வகையில் இத்தகைய சாமியாடல் முறையும் தீர்க்கதரிசனங்களும் அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் பெரிதும் உதவி புரிகின்றன” என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். அத்துடன் அரங்கில் இருந்த பெரும்பான்மையோரும் ‘உரு’ என்ற சாமியாடல் முறையையும் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையிலும் மிகவும் உண்மை இருப்பதாகவே தமது நம்பிக்கையினை வெளிப்படுத்தினர். இவர்கள் மட்டுமன்றி இன்று தற்போது ஈழ இலக்கியத்தில் காத்திரமாக இயங்கி வரும் பெரும்பாலான படைப்பாளிகளும் சாமியாடல்களிலும் சாமிமார்கள் கூறும் தீர்க்கதரிசங்களில் அதிக நம்பிக்கையினையே தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ‘கனவுச்சிறை’ இல் தேவகாந்தனும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ இல் யோ.கர்ணனும் ‘பெர்லின் நினைவுகள்’ இல் பொ.கருணாகரமூர்த்தியும் இத்தகைய பாத்திரங்களை உலவ விட்டு இவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போன்ற தமது கருத்தினை அப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வழக்கானது எமது மண்ணில் தொன்றுதொட்டே பாரம்பரியமாக இருந்து வருவதனால் இவர்கள் மனங்களிலும் ஆழ ஊடுருவியுள்ளதையே வெளிப்படுத்துகின்றன. ஆயினும் பல தசாப்தகாலங்களாக ஈழ இலக்கிய உலகில் அரசோச்சிய இடதுசாரி இலக்கியவகையில் இவை போன்று குறிப்புகளோ நம்பிக்கைகளோ எதுவும் இல்லை. இது போன்ற நம்பிக்கைகள் இன்று எமது இலக்கியங்களிலும் படைப்புக்களிலும் அதிகம் வேரூன்றுவதற்கு எமது இலக்கிய உலகில் பின் கதவு வழியாக உள் நுழைந்த பின்நவீனத்துவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது எமது அனுமானம் ஆகும்.

Continue Reading →

ஆய்வு: இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல்: காக்கைவிடு தூது பனுவலை முன்வைத்து

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது நூல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு அணிசேர்த்தனர். இவ்வகையில், இந்தியெதிர்ப்புப் போரின்போது காக்கையைத் தூதாகவிடுத்துத் தமிழில் யாக்கப்பட்டுள்ள ‘வெண்கோழியுய்த்த காக்கைவிடு தூது’ எனும் நூல் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாரதீய சனதா கட்சியினர் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகியுள்ளன. இச்சூழலில் சமற்கிருதமே உயர்ந்ததென்றும் அம்மொழியில் எழுதப்பெற்று, வருணாசிரமத்திற்குப் பாதுகாவலாயிருக்கும் (மகாபாரதம் எழுத்து வடிவில் ஆக்கப்பட்ட காலத்தில் இல்லாது பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட) பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றும் வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறினார். மேலுமவர், ஐ.நா.சபையில் இந்தியாவிற்கான மொழியாக இந்தியை முன்மொழிவோம் என்கிறார். ஐ.நா.வில் இந்தியைக் கொண்டுவர 129 உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது. இந்திமொழியில்தான் அனைத்து மாநில அலுவலகக் கடிதங்கள் இருக்க வேண்டுமென்று மோடி தலைமையிலான அரசு ஆணையிட்டுப் பிறகு திரும்பப்பெற்றது. 32 ஆண்டுகளுக்குப்பிறகு ‘உலக இந்திமொழி’ மாநாட்டைப் போபாலில் தொடங்கிவைத்தார் (09.09.2015-11.09.2015) மோடி. “வேலை வாய்ப்பிற்கேற்ற ஒரேமொழி இந்திதான்” என்று மாநாட்டுக் குறிக்கோள் வாசகம் கட்டமைக்கப்பட்டது. “இந்தியை மறந்தால் நாட்டுக்குத்தான் இழப்பு” என்று 10.09.2015ஆம் தேதி மாநாட்டில் மோடி பேசியுள்ளார். இந்திதான் இந்நாட்டிலுள்ள ஒரேமொழியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஓகத்தில் (யோகா) உள்ள சூரிய வணக்கத்தை ஏற்காதவர்களும் இராமனை ஏற்காதவர்களும் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சியை உண்பவர்களின்மீது காழ்ப்புணர்ச்சியை – இனவெறியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது நடுவணரசு. உத்திரபிரதேசத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்றும் தின்றார் என்றும் கூறி, இசுலாமிய முதியவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் காட்சி ஊடகங்களில் வெளியாயின. யார் எதைத்தின்ன வேண்டுமென்று முடிவுசெய்யும் அதிகாரம் யாருக்குமில்லை.

மத்திய அரசால், சமற்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதில் தவறில்லை என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன். பன்மைப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில், சமற்கிருதம் மற்றும் இந்தியைக் காட்டிலும் பழைமையும் இளமையும் கொண்டிருக்கின்ற மொழிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் வழக்கில் இல்லாத, வளர்ச்சியென்பதே இல்லாதுபோன, சமற்கிருதத்திற்குத் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது நடுவணரசு. இந்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறது; இவ்வாறு செய்வதனால் சமற்கிருதத்தை மீட்டெழச்செய்து மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் பணியைத் துணிந்து செயல்படுத்தி வருகிறது.

Continue Reading →

ஆய்வு: குறுந்தொகை காட்டும் பாலைத்திணைச் சமூகம்

முன்னுரை

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -செவ்வியல் இலக்கியத்தின் செம்மாந்த வளம்பெற்ற நூல்களில்; குறுந்தொகை தனித்துவம் மிக்கது. குறுகிய அடிகளில்; செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் பேறு பெற்றது.

சங்க காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் இந்நூற்பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. “குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்கச் சமூக வாழ்வியலில் நிலைபெற்ற கூறுகளான நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, பொருளியல் வாழ்வு, சமூக மேம்பாடு ஆகியவற்றைப்; படம் பிடித்துக் காட்டுகின்றன” என்ற கருதுகோளை முன்வைத்து இக்கட்டுரை அமைகின்றது.

அகவாழ்விலும், புறவாழ்விலும் சமூகநெறிகள் ஓர் ஒழுங்குமுறைக்குட்பட்ட வரையறைக்குள் சமூகச் செயலாற்றியதைச் சங்கப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. குறுந்தொகையின் பாலைத்திணைப் பாடல்கள் தெளிவுறுத்தும் சமூகவியல் பண்புகள், அதன்வழி பெறப்படும் சங்ககால வாழ்வியல் சிறப்புகள், தமிழர் வாழ்வின் தனித்;தன்மை ஆகியனவற்றைக் கண்டறிதல் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றன.

சங்க காலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது. காடுகள், மலைகள், கழனிகள், கடற்கரைப் பகுதிகள் மக்கள் வாழிடங்களாக இருந்தன. இந்த நானிலத்திலும் வாழ்ந்த மக்கட் சமூகத்தில் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமைக்கூறுகளும், நிலவியல் சார்ந்த சிறப்புக்கூறுகளும் நிலைபெற்றிருந்தன. குறுந்தொகையின் திணைநிலைப் பாடல்கள் அவ்வத்திணையின் இயற்கை இயங்கியலோடு பொருந்தவருமாறு படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் பாலை

சங்க காலத்தில் மன்னர், மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் சிறுசிறு பாடல்களின் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களில் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்வியல் புனையப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் போர், கொடை, நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, வாழ்வியல் முதலானவற்றில் ஏதாவதொன்றை அறிவிப்பனவாக அமைந்துள்ளன.

Continue Reading →

நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!

கார்த்திகேசன் மாஸ்ட்டர்– கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. – பதிவுகள் –


‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.

எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.

கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

Continue Reading →

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் ஒரு நூல்வழிப் பதிவு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது வானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

வடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா ‘பதிவுகள்” இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்”  என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது.  துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.

Continue Reading →

மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.

கருத்துரை
இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.

வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் இம்முறை நான்கு நூல்கள் இடம்பெறுகின்றன.

1. வானத்தைப்பிளந்த கதை ( செழியன் எழுதியது) ஈழப்போராட்ட நாட்குறிப்பு – விமர்சனஉரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
2. நைல்நதிக்கரையோரம் ( நடேசன் எழுதியது) பயண இலக்கியம் – அறிமுகவுரை சாந்தி சிவக்குமார்.
3. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – (பெருமாள்முருகன் எழுதியது ) நாவல் – மதிப்பீட்டுரை : நடேசன்.
4. காட்டில் ஒரு மான் – (அம்பை எழுதியது) சிறுகதைத்தொகுப்பு அறிமுகவுரை: விஜி இராமச்சந்திரன்

Continue Reading →

1. உணவெனும் உன்னதம்!

இயற்கையுடன் வாழுதல் - ஷியாமளா நவம் -– அண்மையில் ‘நான்காவது பரிமாணம்’ பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஷியாமளா நவம் அவர்களின் நூலான ‘இயற்கையுடன் வாழுதல்’ தொகுப்பு நூலில் உடல் நலம், மக்கள் நலம் போன்ற விடயங்களையொட்டிய , அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய கட்டுரைகளுள்ளன. இகட்டுரைகள் ஏற்கனவே ‘டொராண்டோ’வில் வெளியாகும் சஞ்சிகைகளில் வெளியானவைதாம். அவை மக்களின் நன்மை கருதிப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகின்றன.  –


“Let food be thy medicine and medicine be thy food.” – Hippocrates-

‘உணவே மருந்து’ எனும் உண்மையை மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரஸ் பல நூறாண்டுகளுக்கு முன்பே கூறிப்போயிருக்கின்றார். இதனை உணராது, உணவினால் நோயின்றி வாழ்வதை விடுத்து, வெறும் இரசாயன உற்பத்திகளை மருந்துகளாகவும் உணவுகளாகவும் உள்ளெடுத்து, நோய்நொடிகளை விலைக்கு வாங்கிக்கொள்பவர்களும் – உயிர்வாழ்வதற்காக உணவருந்தாமல், உணவருந்துவதற்காகவே உயிர்வாழ்பவர்களும் பல்கிப்பெருகிக் காணப்படும் கலிகாலமிது!  உணவு என்பது ருசிக்கு மட்டும் உரியதல்ல. உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து,  ஆரோக்கியம், மனநிலை, குணநலன்கள் அனைத்தும் இவ்வுணவுடன் சம்பந்தப்படுபவையாகும். ஒவ்வொரு நேர உணவும் எமது இரண்டங்குல நாக்கினைத் தாண்டியதும், அகத்துறிஞ்சும் சுமார் 22 அடி நீளமான சிறுகுடல் கடந்து, கழிவகற்றும் பெருங்குடல் வரை ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஊர்ந்து சென்று பயனளிக்கிறது. இந்த உணவின் உற்பத்தியும் பதப்படுத்தலும் வகைத்தெரிவுகளும் அளவுகளுமே பெருமளவில் அதன் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கின்றன.

ரொறன்ரோ பொது ஆரோக்கியப்பகுதியினரும், தேசிய கனேடிய ஆரோக்கியப்பிரிவினரும், வேறுபல நிறுவனத்தினரும், சத்துணவியலாளர்களும் மக்களுக்குப் பலதரப்பட்ட உணவு வழிகாட்டல்களை ‘வானவில்லின் வர்ணங்களில்’ வழங்கியுள்ளனர். இந்நாட்டில் வாழும் பல்லின மக்களது பாரம்பரியங்களுக்கும் கலாசாரங்களுக்கும் ஏற்பவே இந்த வழிகாட்டல்கள் வரையறுக்கப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு, இன்றைய அவசர – நாகரிக உலகின் நடைமுறைகளை நாம் கண்மூடித்தனமாகக் கைக்கொண்டு வாழ்ந்துழல்கின்றோம். வானவில்லின் வர்ணங்கள் உணவுத் தேர்விலும் உண்டு என்பதைக் கவனத்திலெடுத்து, பலசரக்குக் கடைகளிலும்  காய்கறிக் கடைகளிலும் வெளியே உணவருந்தும்போதும் இந்த வர்ணங்களையும் சில உணவு வரன்முறைகளையும் மனதிற்கொண்டு தெரிவுகளையும் அளவுகளையும் தீர்மானிப்பது எமது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைச் சுட்டிக்காடுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →