வாசிப்பும், யோசிப்பும் 268 (முகநூற் பதிவொன்றும் சில எதிர்வினைகளும்): யோ. புரட்சியின் ‘செஞ்சோற்றுக்கடன்” கவிதை பற்றி…

- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் யோ.புரட்சி பதிவிட்டிருந்த முகநூற் பதிவினைப்பார்த்தேன். இது ஒரு கவிதை. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகளை விபரிக்கும் கவிதை. யோ.புரட்சியும் படையினரின் தாக்குதல்களுள்ளாகிக் காயம் பட்டவர்களிலொருவர். அச்சமயம் அவருக்கு , அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எவ்விதம் உயிரைப்பணயம் வைத்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் உதவினார்கள் என்பதை இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. கவிதையென்பதின் வெற்றியானது அதனைப்படைத்தவரின் புலமைச்சிறப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எத்தனையோ, படைத்தவரின் புலமையினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல படிப்பவரின் உணர்வுகளில் எவ்விதப்பாதிப்புகளையும் ஏற்றும் வலிமையற்று காலத்தில் காணாமல் போய் விடுகின்றன. சிறந்த கவிதையின் வெற்றியென்பது அதனைப்படைத்த கவிஞரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சியின் வெளிப்பாடாக வெளிப்படும் கவிதையே வாசிப்பவரின் உணர்வுகளையும் பாதித்து , காலத்தில் நிலைத்து நின்று விடுகின்றது. யோ.புரட்சியின் இக்கவிதை அத்தகைய கவிதைகளிலொன்று. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் அடைந்த உணர்வுகளின் உண்மையின் உண்மையான வெளிப்பாடாகவிருப்பதால் , வாசிப்பவரின் நெஞ்சங்களை ஒரு கணம் அசைத்து விடுகின்றது. நிலவிய மானுடத் துயரங்கள் வாசிப்பவர் நெஞ்சங்களில் வலியை ஏற்படுத்துகின்றன. மானுடர்கள் மட்டுமல்லர் மிருகங்கள் கூடத் தம் அன்பை வெளிப்படுத்துகின்றன. அக்காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளிலொன்றாகவும் இக்கவிதை விளங்குகின்றது.

“யாருமருகில்இல்லாவேளை, காலதிலே எறிகணைபட்டு”க் கவிஞர் காயமுற்றவேளை, “தன்னாடை தன்னில், சிறுதுண்டு கிழித்து”க் கவிஞரின் குருதிப்பெருக்கைத்தடுத்த ஏழைத் தமிழ்த்தாய், “தாய்தன்னை இழந்த, தளிர்தன்னைக் கண்டு, யார் பிள்ளை எனும் கேள்வியது கேளாது தன்முலை தனையூட்டி வன்பசி தீர்த்த” நல்மனமுள்ள பெண், “அனைத்துறவும் இழந்து, அம்பலவன் பொக்கனையில் அந்தரித்த வேளையிலே அருகேயோர் உறவாகி” அன்புதனை அளித்துக் கவிஞருக்குக் கருணை காட்டிய ஜிம்மி என்னும் நாய், ‘முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்கள். ‘பதுங்கு குழிக்கு உரப்பையின்றி பாடுபட்ட நாட்களிலே பழஞ்சேலை’ தந்துதவியவர்கள், ‘பதுங்கு குழியில் இடம்தந்து பாசமொடு கஞ்சிதந்து நேசமாய்’ அணைத்தவர்கள்…… .. இவ்விதம் தாம் அந்தரித்த வேளையிலும் மானுட நேயம் காட்டிய, மிருக நேயம் காட்டிய உயிர்களையெல்லாம் இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. அதனாலேயே வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தும் சிறப்பு மிக்கதொரு கவிதையாகவும் இக்கவிதை விளங்குகின்றது. கவிதையின் முழு வரிகளும் கீழே:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 267: முகநூற் பதிவுகள் சிலவும், எதிர்வினைகளும்..

- வ.ந.கிரிதரன் -– அண்மையிலிட்ட முகநூற் பதிவும் சிலவும், அவற்றுக்கான எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவிடுகின்றேன். –

1. நினைவு கூர்வோம்: மகத்தான அக்டோபர் புரட்சி (நவம்பர் 7, 1917)

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! ” – பாரதியார் –

இந்தப்புரட்சி ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது? விளாடிமீர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளால் ரஷ்யாவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பு முதல் முறையாக ஒரு நாட்டில் முழுமையாக நிறுவப்பட்ட தினம் என்பதால்தான். கார்ல் மார்க்ஸ் தனது இடையறாத ஆய்வுகள் மூலம் மானுட உலகுக்கு வழங்கிய மகத்தான மூலதனம் அவரது மூலதனம் என்னும் ஆய்வு நூலே. பல்வேறு பிரிவுகளால் (மதம், மொழி, இனம், வருணம், வர்க்கம் போன்ற) பிளவுண்டு, துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மானுட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வானது அரசு உலர்ந்து உக்கி விட்ட, வர்க்கங்களேதுமற்ற கம்யூனிசச் சமுதாய அமைப்பிலேயே இருக்குமென்னும் தன் கனவைத் தன் ஆய்வுகள் மூலம் நிறுவிப் படைத்திட்ட நூல்தான் இந்த மூலதனம்.

மார்க்ஸின் கனவை, ஆய்வுகள் மூலம் நடைமுறைச்சாத்தியமான கனவு என்று எடுத்துக்காட்டிய கனவினை இம்மண்ணில் பொதுவுடமை அமைப்பொன்றினை நிறுவியதன் மூலம் மார்க்ஸின் கனவின் முதற் கட்டத்தினைச் சாத்தியமாக்கியவர் விளாடிமீர் லெனின். இப்புரட்சியின் முக்கியத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிந்து, ஆதரித்துக் கவிதை பாடிய இலக்கியவாதி மகாகவி பாரதியார். அவரது ‘ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதை.

Continue Reading →

பயணியின் பார்வையில் – அங்கம் 26: வாழ்நாள் சாதனையாளர் பேராசிரியர் மெளனகுருவின் ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு ‘மகுடம்’ சிறப்பிதழ்

மெளனகுருவுடன்கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது. இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன். சுநாமியின்போது மௌனகுரு – சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில் கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார்.

அந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். “வேண்டாம். தொடருங்கள்” எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார். அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல் மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள். அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம் தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.”சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே” என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம். சங்காரம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது. தலைமை வகித்தவர் கி. இலக்‌ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன், பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.

அன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம். அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அசாதாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார். பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.

Continue Reading →

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி….

பொன் குலேந்திரனின் 'காலம்' தொகுப்பு.– தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் ‘காலம்’ (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. –

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. “இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை.” என்றும் “மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20” என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.

Continue Reading →

திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “சூழல் அறம்“

சுப்ரபாரதிமணியன்திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று  நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:

“இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.

பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.

Continue Reading →

மலேசியாவில் சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ‘கடவுச்சீட்டு’ வெளியீடு!

சுப்ரபாரதிமணியன்சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்   ‘கடவுச்சீட்டு’ மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன் (தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்)  அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்  ஜலான் ஈப்போவில் – நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர். நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்  அவர்கள் பேசினார். அவர் தனதுரையில் “சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக  ‘கடவுச்சீட்டு’  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது. ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின்   ‘பால் மரக்காட்டினிலே’ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.

Continue Reading →

மொழிபெயர்ப்புக் கவிதை – சிங்களக் கவிதை: கவிதை: உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று!

- எம்.ரிஷான் ஷெரீப்

– செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. –


இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க

கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்

சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள்  எமது மகள்

Continue Reading →

சிறுகதை: மனோதர்மம்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ! மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.

‘நாங்கள்தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம்! சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?”

எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து.. இருபது மைல் வரை அலைந்திருக்கிறார். அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளராதிருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம். பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். இளைப்பாற வேண்டும். ‘ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்!” எனக் காலையில் புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளவில்லை. மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூச்செடுக்கக் கஷ்டப்படுகிறாள். நெஞ்சுவலி.. இருக்க, எழும்ப யாராவது பிடித்துவிடவேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பதுபோலத்தான் நடக்கமுடிகிறது. இப்படியே விட்டால் என்ன செய்யுமோ என அவருக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ? நல்ல ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் அவளைக் காட்டவேண்டும். மருந்து எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்! பல இடங்களிலும் அலைந்து.. இறுதி முயற்சியாக, தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.

‘என்ன அப்பு.. இந்த நேரம்?”

விஷயத்தைச் சொன்னார்.

‘ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டால் பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்!”

Continue Reading →

ஆஸ்திரேலியா: இலங்கை மாணவர் கல்வி நிதியம் 29 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலியா: இலங்கை மாணவர்   கல்வி  நிதியம் 29 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்    அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்  ஆண்டு  முதல்  இயங்கும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  29  ஆவது   ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும்  11-11-2017  ஆம்  திகதி  சனிக்கிழமை  மாலை  5.00  மணிக்கு    மெல்பனில்  VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும்.    நிதியத்தின்  தலைவர்  திரு.விமல். அரவிந்தன்   தலைமையில் நடைபெறவுள்ள  29  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  நிதியத்தின் உறுப்பினர்களின்    ஒன்றுகூடலும்  தகவல்  அமர்வும்  இடம்பெறும். இலங்கையில்    நீடித்த  போரில்   பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ் மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்காக  1988  ஆம்   ஆண்டு   தொடங்கப்பட்ட நிதியம்,   இதுவரையில்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு   உதவியுள்ளது.    நூற்றுக்கணக்கான  மாணவர்கள்  நிதியத்தின் உதவியினால்   பல்கலைக்கம் பிரவேசித்து,  பட்டதாரிகளாகியிருப்பதுடன்  மேலும்  பல மாணவர்கள்   அரச  மற்றும்  தனியார்   துறைகளிலும்  பணியாற்றுகின்றனர். மேலும்   பல  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  நிதியம்    உதவவேண்டியிருப்பதனால்  மேலதிக  விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும்  29  ஆவது    ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல்   அமர்வும்  ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு:   இக்கூட்டத்தில்   இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள விரும்பும்    நிதியத்தின்  உறுப்பினர்களும்  அன்பர்களும்  தமது  வருகையை   தயவுசெய்து  தாமதமின்றி  உறுதிப்படுத்தவும்.   இந்த  ஒன்றுகூடல்   இராப்போசன   விருந்தில்   கிடைக்கப்பெறும் நன்கொடைகள்,   கல்வி   நிதியத்தின்   வளர்ச்சிக்கு    வழங்கப்படும்.

Continue Reading →