ஈழத்தில் நிகழ்ந்த போர் அங்கு பல பெண் கவிஞைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் போர்ச்சூழல்சார் அரசியல் விமர்சனக் கவிதைகளையும், போர் ஏற்படுத்தியுள்ள துயரினையும், காதலையும் பேசுவதோடு பெண் விடுதலையினையும் மிகநுட்பமாக தமது கவிதைவழி மொழிகின்றனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில், அம்புலியின் கவிதை ஒன்று ஈழத்துப்போரின் ஊடாக வாழ எத்தனிக்கும் ஒரு பெண்ணின் முயற்சியாக புரிந்து கொள்ளமுடிகிறது. அம்புலியின் நாளையும் நான் வாழ வேண்டும், எரிமலைக் குமுறல், தேடி அடைவாய், நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை உள்ளிட்ட பல கவிதைகள் இத்தகைய பாடுபொருளையே கொண்டுள்ளன. “தேடி அடைவாய்” போரின் நெருக்குதலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்க வேண்டிய எதையும் வழங்க முடியாத இயலாமையின் வெளிப்பாடாக விரிகின்றது. மாரிக்குளிரில் நனைந்திடினும் உள்ளம் தணல் பூத்துக் கிடக்கின்றது. துயரங்களின் நடுவினில் நான் உன்னை வாரியணைக்க முடியாத தாயாகியுள்ளேன். ஓர் அழகிய காலையை உனக்குக் காட்டமுடியாத, உன்னோடு விளையாட முடியாத பாலைவன நாட்களையே உனக்கு பரிசளிக்கிறேன் என்று கழிவிரக்கத்தைப் பதிவு செய்கின்றது.
மேலும் எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து உயிர்குடிக்கும் எறிகணைக்குள், மேகம் கலைய வானத்துள் வட்டமிடும் போர் விமானங்களுக்கிடையில், துப்பாக்கி வெடியோசையின் சத்தங்களுக்கிடையில் எப்படி உனக்கு இனிமையை வழங்கிடமுடியும் என்னும் கேள்வியினையும் எழுப்புகின்றது. இது ஒரு பெண்ணின் மூலமாக எழுப்பப்படுவதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்கான எந்த ஒரு சூழலும் ஈழத்தில் இல்லாமலிருப்பதை கவிதை அடையாளப் படுத்துகின்றது. இறுதியாக தீயச்சூழல் மாய்ந்து புதிய வாழ்வு பிறக்கட்டும் என்று ஒரு தாயின் ஏக்கமாக, வாழ்த்தாக நீளும் கவிதை என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை நீயே சென்றடைவாய். வழிகளில் சிவப்பும் இறக்கைகளில் நெருப்பும் உனக்குச் சொந்தமாகட்டும். எம்மை வேகவைத்த காலம் உன்னால் வேகி சாம்பராகட்டும். ஒரு புதிய வாழ்வு உன் கரங்களில் மலரட்டும் என்பதாக எதிர்ப்புணர்வினையும் நம்பிக்கையினையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்ற கவிதையாக அம்புலி இந்த கவிதையினை முடிவுக்கு கொண்டு வருகின்றார்.
“எரிமலைக் குமுறல்” போரினால் அனுபவிக்க முடியாது போன பாலியல் சார் எண்ணங்களை ஏக்கங்களை அதன் துயரினை பதிவு செய்கின்றது. என் தோழர் எல்லையில் துயிலாமல் நானோ வெம்புகிறேன் நள்ளிரவில். தனியாக உரத்த குரலில் கானம்பாடுவதற்கு சத்தம் வரவில்லை என்பதாக பேசுகின்றது. “நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை” எனக்கு யுத்தம் பிடிப்பதில்லையாயினும் அதன் முழக்கத்தினிடையே எனது கோபம் காலநிர்பந்தத்தில் மாற்றமடைந்து விட்டது என போர் மனித வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை முன்வைக்கின்றது. தொடர்ச்சியாக குண்டுகளின் அதிர்வோசை கேட்காத ஒரு தேசத்தை தேடும் அம்புலி ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மகிழ்வோடு பூரிக்கும் என் தேசத்தை தேடி கால்கள் விரைகின்றன என்கிறார். அம்புலியின் கவிதை ஆக்கத்தில் துயரின் ஊடாக தேசத்தைக் காக்கின்ற எண்ணங்களும், போரிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு ஒரு புனரமைக்கப்பட்ட தேசத்தை கண்டடைய முயற்சிப்பதும் அதன் மீது முழு நம்பிக்கை கொள்வதும் பெரிய விஷயமாக தென்படுகிறது.