‘பதிவுக’ளில் அன்று: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கட்டுரைகள் எட்டு!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


1. திருகோணமலையில் இராணுவம் செய்த அதர்மக் கொலைகள்.

வாழ வேண்டிய ஐந்து இளம் உயிர்கள் 2.01.06ல் திருகோணமலையில் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டுவிட்டன.சண்முகராசா கஜேந்திரன்,லோகிதராஜா றோஹன்,தங்கத்துரை சிவானந்தராசா,யோகராசா ஹேமச்சந்திரன்,மனோஹரன் ராஜிகர் என்ற இளம் குருத்துக்கள், எத்தனையோ கனவுகளைத்தாங்கிக் கொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கியவர்கள்,இலங்கை இராணுவத்தின் அதர்மத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை இழந்து துயர்படும் தாய் தந்தையர்கள் , உற்றார் உறவினர், ஊரார், ஆசிரியர்கள், ஒன்றாய்ப் படித்த சினேகிதர்களுக்கு எனது மனம் கனிந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்புக்கு எனது அனுதாப வார்த்தைகள் எள்ளளவும் ஒவ்வாது.

நானும் ஒரு தாய். எங்களை மண்ணுக்குத் தியாகம் கொடுக்கவேண்டிய மகன்களை, இந்த இளம் வயதில் நாங்களே மண்ணுக்குத் தானம் செய்வதின் கொடுமையைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது. எங்கள் வயிற்றில் தாங்கி,எங்கள் வாழ்க்கையையே அவர்களுக்குத் தியாகம் செய்த தாயின் துயரை வெற்று வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.  பால் கொடுத்து, நிலவுகாட்டி உணவு கொடுத்து, எனது மகன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தனது சமுதாயத்திற்கும் எவ்வளவோ நன்மை செய்வான் என்ற ஒவ்வொரு தாயின் கற்பனையையும் இப்படி அநியாயமான கொலைகளால் அழித்த இராணுவதையும் அந்த இராணுவத்தை தூண்டிவிடும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தற்போது, தமிழ் மக்களின் உயிர்கள் வெறும் ஒரு சிறு பூச்சியின் உயிரைவிட மலிவாக, அற்பமாக அழிக்கப் பாடு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் எத்தனை தமிழர்கள் இலங்கையில் வாழப்போகிறார்கள்?

இலங்கைக் கடற்படைக்குக் குண்டு எறியப் போனபோது இந்த இளைஞர்கள் கடற்படையினரின் தாக்குதலால் இறந்ததது என்று ஒரு செய்தியும் , கடற்கரையில் காற்றாட நின்ற இளைஞர்களைக் கடற் படை சுட்டுத் தள்ளியதாக இன்னொரு செய்தியும் சொல்கிறது. அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைபற்றிய அபிப்பிராய பேதங்களும் அதனாற் சிலரடையப் போகும் அரசியல் இலாபங்களையும் பேசுவதை விட, இதச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவது மனித உரிமைக்குப் போராடும் ஒவ்வொருத்தரின் கடமையாகும்.

Continue Reading →