2004 சுனாமி நினைவலைகள்: அனாமிகா – கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!

அநாமிகாபாலசிங்கம் சுகுமார்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.

அவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:

கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!
200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .

பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது

மகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:

1.
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ….
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் தொடங்கி பல்வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பொருள் விளக்கம் தரும் அவ்வுரைகளுக்கு இடையே வேறுபாடுகளும் மறுப்புகளும் விவாதங்களும் ஏராளமாக உள்ளன. உரையாசிரியர் ஒருவரின் உரையில் குறிப்பிட்ட உரைப்பகுதிகள் பிழை என்று இனங்காணப்படுகின்றன. இப்பிழையுரைப் பகுதிகள் பொருந்தா உரைகள் எனப்படுகின்றன. இப்பொருந்தா உரைகளை மறுத்தும், மறுப்பிற்கான காரணங்கள் சுட்டியும் விளக்கும் உரைகள் மறுப்புரைகள் எனப்படுகின்றன. பொருந்தா உரையை மறுப்பதோடு அவ்வுரைக்கு மாறான வேறொரு பொருந்தும் உரை தருதல் மாற்றுரை எனப்படும். இவ்வாறான பொருந்தா உரைகளையும், மறுப்புரைகளையும், மாற்றுரைகளையும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், வேங்கடராசலு ரெட்டியார், சிவஞான முனிவர், பாலசுந்தரம் ஆகியோர் உரைவிளக்கத்திலும் ஆய்வுரைகளிலும் காணமுடிகின்றன. இக்கட்டுரை தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் காணலாகும் மொழிமரபில் சார்பெழுத்துகள் குறித்த மறுப்புகளை மட்டும் ஆய்ந்து விளக்குவதாக அமைகிறது.

தனிச்சொல் குற்றியலிகரம்
ஒரு சொல்லில் ஒலிச்சூழல் காரணமாக இகரம் குறுகி தன் ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். அப்படிக் குன்றி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். இது தனிச்சொல்லில் ‘மியா’ என்ற அசையில் தோன்றும். கூட்டுச் சொல்லில் குற்றியலுகரச் சொல் யகர முதற்சொல்லோடு புணரும்பொழுது அக்குற்றியலுகரம் இகரமாக மாறும். அந்த இகரம் அரைமாத்திரை குறைந்து ஒலிக்கும்.

தனிச்சொல் குற்றியலிகரத்தை,

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகர மூர்ந்தே.”(சூத் – 34)என்ற சூத்திரம் குறிப்பிடும்.

‘கேள்’ என்பது உரையசைச் சொல் அல்ல.
ஒருவரிடம் தான் கூறும் பொருளை, அவர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சொல் உரையசைச் சொல் எனப்படும். மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு உரைகண்ட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கேண்மியா, சென்மியா என்பனவற்றை உதாரணங்களாகத் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் ‘கேண்மியா’ என்ற சொல்லைப் பகுத்து,‘கேள்’ என்பதை உரையசைச் சொல்லாகவும், ‘மியா’ என்பதை இடைச்சொல்லாகவும் குறிப்பிடுகிறார்.1

இக்கூற்றை வேங்கடராசலுவும் சுப்பிரமணியரும் மறுத்துள்ளனர். ‘மியா’ என்பதே முன்னிலை அசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக தொல்காப்பிய சொல்லதிகார இடையியலில் உள்ள

“மியாயிக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்.” தொல் – சொல் -சூத் – 269.

என்ற சூத்திரத்தை சுப்பிரமணியர் காட்டுகிறார்.

Continue Reading →