எழுத்தாளர் அகஸ்தியர் நினைவுச்சிறுகதை (நினைவு தினம் – டிசம்பர் 08) : பிறழ்வு

எழுத்தாளர் அகஸ்தியர்அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’  மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த,  தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை  வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.

மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் – கொப்பிகள் – நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.

ஒரே கரிசனையோடு வாசிப்பு.

புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.

‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.

சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் – அசையான்.

அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.

எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.

படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய  நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.

முழு விஸ்வாசத்தோடு  தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.

எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.

மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை,  அவள் – தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய,  ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.

அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.

அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.

மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா – இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.

ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.

எந்த நேரமும் – நெடுக, நெடுக இப்படித்தான்.

‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.

Continue Reading →

இலண்டனில் ‘இமைப்பொழுது’

இலண்டனில் 'இமைப்பொழுது'

எத்தகைய குளிர் என்பதைக் கூடச் சிந்திக்காமல் நவம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமையன்று கூடிய கூட்டம்  லண்டன் ஈலிங் அம்மன் கோவில் அவையை நிறைத்திருந்தது. காரணம் திருமதி மாதவி சிவலீலன்  அவர்களின் `இமைப்பொழுது` கவிதைநூல் வெளியீடாகும். யாழ் பல்கலைக்கழக முதுமானிப் பட்டதாரியான திருமதி மாதவி சிவலீலன், தற்போது லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் உப அதிபராகவும்  வெம்பிளி தொழில்நுட்பப் பாடசாலையின் போதனாசிரியாராகவும் இலக்கிய விமர்சகராகவும் லண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைத்தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். இது இவரது இரண்டாவது நூலாகும்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வை திருமதி இந்திராவதி சுந்தரம்பிள்ளை மற்றும்  திருமதி பாலாம்பிகை  இராசநாயகம், திருமதி கௌசல்யா சத்தியலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கு ஏற்றிவைக்க, லண்டன் தமிழ் நிலைய ஆசிரியை திருமதி ஜெயந்தி சுரேஷ் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, மண்ணுக்காக தம்முயிர் ஈந்த மறவர்களிற்கும் மக்களுக்குமாக மௌன அஞ்சலியுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பமானது. கவிஞர் சு. திருப்பரங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார்.  அன்றைய நிகழ்வானது இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்டது. காலஞ்சென்ற அமரர் கலாநிதி காரை  செ. சுந்தரம்பிள்ளையின் நினைவேந்தலையும் அவரது இளைய மகளான திருமதி மாதவி சிவலீலனின் கவிதை வெளியீட்டையும் கொண்ட அந்நிகழ்வை, முன்னைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு மு நித்தியானந்தன் தலைமையேற்று முன்னின்று நடாத்திச் செல்ல இனிதே நகர்ந்தது பொழுது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக…

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...- வ.ந.கிரிதரன் -மகாகவி பாரதியாரின் நினைவு தினம் டிசம்பர் 11. நான் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லும் நூல்களில் நிச்சயம் ‘பாரதியாரின் கவிதைகள்’ அடங்கிய நூலுமிருக்கும். பாரதியின் அறிவுத் தேடல் மிக்க நெஞ்சு, சமுதாயப் பிரக்ஞை மிக்க நோக்கு எல்லாமே என்னை அவன் ஆகர்சிக்க முக்கிய காரணங்கள். மானுட இருப்பின் சகல கோணங்களைைப்பற்றியும் அவனது சிந்தித்தான். கனவுகள் கண்டான். அவற்றை அவன் எழுத்தில் வடித்தான். அனுபவமும், அறிவுத்தேடலும் அவன் எழுத்துகளெங்கும் நிறைந்திருந்தன. மானுடனொருவருக்குத் தேவையான அனைத்துமே அவனது எழுத்துகளில் நிறைந்திருந்தன. இதனாலேயே அவனது கவிதைகள் அடங்கிய தொகுதியானது வெறும் கவிதை நூலாக மட்டுமின்றி, வாழ்க்கைக்கு வழிகாட்டுமொரு வழிகாட்டியாக, அறிவினைப்போதிக்கும் அறிவு நிலையமாக, நண்பராக, காதலராக, இயற்கையை உபாசிப்பவருக்கு இன்பமளிக்கும் இயற்கை வளங்களாக.. இவ்விதம் பல்வேறு வழிகளில் விளங்கியது. எனக்கு மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் அவனது கவிதைகளின் சில வரிகளை வாசிப்பேன். மறுகணமே சோர்வு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

எனக்கு முதன் முதலாகப் பாரதியுடனான அறிமுகமும், தொடர்பும் என்னுடைய ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பமாகியிருந்ததாக நினைவு. பாரதியாரின் கவிதைகள், ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (இராமாயணம்) , ‘வியாசர் விருந்து’ (மகாபாரதம்) மற்றும் புலியூர்த் தேசிகனின் ‘சிலப்பதிகாரம்’ , ‘நற்றிணை’ ஆகிய நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒருநாள் கூட அப்பா அவற்றை வாசித்துப் பார் என்று கூறியதில்லை. அவ்விதம் வாங்கிப்போட்டிருந்த நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தொடங்கியபோது எனக்கு அறிமுகமாகி, என்னுள்ளத்தில் வந்து குடியேறியவரே மகாகவி பாரதியா. அன்று வந்து குடியேறியவர் இன்று வரை மட்டுமல்ல நான் இருக்கும்வரை இங்குதான் தங்கியிருக்கப்போகின்றார்.

இவ்விதம் என் அபிமானக் கவி பாரதியின் எனக்குப் பிடித்த கவிதை வரிகள் சிலவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நான் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!

1.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

Continue Reading →