” இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்”! புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை “மச்சான் ” வானொலிக்கலைஞன்!

சண்முகநாதன் வாசுதேவன்“சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினை
பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது – மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்”

இப்படி ஒரு கவிதையை 03-07 – 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.

காலமும் கணங்களும் தொடரில் நான் இதுவரையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்களில் சிலர் அற்பாயுளிலும் சிலர் முதுமைக்காலத்திலும் மறைந்தவர்கள். எனினும் நான் எழுதியவர்களின் வரிசையில் தற்கொலை செய்துகொண்டு அற்பாயுளில் மறைந்தவர் பற்றியும் எழுதநேர்ந்திருக்கிறது. தூக்குக்கயிற்றை முத்தமிடுகின்ற அந்தக்கணம் அவன் ஒரு செக்கண்ட் யோசித்திருப்பானேயானால் அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, வானொலி ஊடகப்பணிகளில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருப்பான்.

மெல்பன் கலைவட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில், “பெற்றோர் பிள்ளைகள் உறவு” என்ற தொனிப்பொருளில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அரைநாள் பகல்பொழுது கருத்தரங்கினை நடத்தியது. அதில் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த காலைவேளையில் எனதும் வாசுதேவனதும் நண்பரான இலங்கையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்த சம்பந்தன் தகவல் தந்தார். 1993 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் மலரவிருந்த 1994 புத்தாண்டிற்காக வாசுதேவனின் நண்பர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். வாசுவும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதியம் அந்த மண்டபத்திற்குச்சென்று ஏற்பாடுகளை கவனித்தான். அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டான். ஆனால், புத்தாண்டு மலர்ந்த வேளையில் அவன் தனது உயிரைத் துறந்தான்.

Continue Reading →

ஆய்வு: சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.

“உயிரினங்களின் பரிணாம முறையில் வளர்ச்சி அடைந்ததைப் போலவே சமூகமும் படிப்படியாக பரிணமித்து வளர்கிறது.  சமூக பரிணாமம் இயங்கு முறையில் அதன் தொடக்கத்தில் ஒரு சிறிய குழுவாக இருந்து பின்னர் பல கூட்டு நிலைகளை அடைந்து அதற்குபின் சமூகமாக மாறுதல் அடைகிறது.  பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குலங்கள் உருவாயின.  குலங்கள் இனக் குழுவாக ஒன்றுபட்டன.  இனக்குழுக்கள் ஒன்றிணைந்து தனி அரசு நாடாக அமைந்தன.  இவ்வாறு சமூகம் சிக்கல் நிறைந்த பரிணாம வளர்ச்சியில் விரிவடைந்தது.

ஸ்பென்சர் சமூகங்களை போரிடும் சமூகம் என்றும,; தொழில் சமூகம் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார்.  போரிடும் சமூகத்தின் அதிகாரம் ஒரு மையத்தில் அமைந்திருக்கும்.  தொழில் சமூகத்தில் அதிகாரம் எல்லோரிடமும் பரவி இருக்கும்.  போரிடும் சமூகத்தில் கட்டுப்பாடு மிகுதியாக இருக்கும்.  கட்டுப்பாடு மைய அரசிலிருந்து பரவும்.  ஆனால் தொழில் சமூகத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்காது.  மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின்படி கடந்து கொள்வர்.  போரிடும் சமூகத்தில் மைய அரசிலிருந்து கட்டளைகள் அவ்வபோது வந்து கொண்டு இருக்கும்.  மக்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்காது.  ஆனால் தொழில் சமூகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்.  போரிடும் சமூகத்தில் மக்களின் உரிமைகள், கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களால் தங்களுடைய உரிமைகளை அனுபவிக்க முடியாது.  இத்தகைய சமூகங்கள் வெவ்வேறு பரிணாம நிலைகளில் இருக்கக் கூடும் என்று ஸ்பென்சர் கருதுகிறார்.”  (பக். 28-29 சமூகவியல், எஸ். சாவித்ரி)

இத்தகைய இருவேறுபட்ட சமூக அமைப்பு முறையையும் சங்க காலம் என்று கூறப்படும் காலத்திய சூழல் என்பதை உணர முடிகிறது. நில அடிப்படையிலான மக்கள் வாழ்வில் தொழிலுக்கு ஏற்றவாறே மக்கள் வாழ்வு ஒருபுறம் அமைந்திருந்தது.  மற்றொரு புறம் போர் அடிப்படையிலான சமூகச் சூழலை அறிய முடிகிறது. இருவேறு சமூக நிலையையும் காண முடிகிறது.  அடிப்படையில் இனக்குழு சிதைந்து, அடிமையுடைமை சமுதாயச் சூழலிருந்து மன்னர் உடைமை சமூகச் சூழல் மாற்றம் பெற்ற காலப்பகுதியென கருத இடமுண்டு.

Continue Reading →