ஆய்வு: சங்க இலக்கியங்களில் முரசு!

செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -முகவரி,	சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள்.  “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற  அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

“முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்”    (கலி.132:4-5)

என்ற கலித்தொகைப் பாடலில் மூன்று வகையான முரசுகள் பற்றி சுட்டப்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். வீரமுரசு போர்க்காலத்திலும், போர்களங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மணமுரசு விழாக்காலங்களில் செய்திகளை அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”        (மணி.விழா.27-31)

என்று மணிமேகலை கூறும். “வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டதும் இடி போன்ற முழக்கினை உடையதும் ஆகிய முரசினைக் கச்சையானையின் கழுத்தின் மேலேற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியினை ஊரவர்க்கு, பழைமையினை உடைய குடியில் பிறந்தோன் அறிவித்தான் என்பர். இதனால் திருவிழாச் செய்தியினை ஊரவர்க்கு அறிவிக்கும் போது முரசு அறைந்து அறிவித்தல், மணிமேகலை காலத்தில் ஏற்பட்டது போலும். ஆனால் சங்க காலத்தில் குயவர்களே தெருத் தெருவாகச் சென்று விழாச் செய்தியினை உரத்துக்கூவி உரைத்தல் வழக்கமென்பதும், அப்போது அவர்கள் நொச்சி மாலையைச் சூடிச்செல்வர் என்பதும் நற்றிணைச் செய்யுளொன்றால் அறியலாம்”2 என்று வெ.வரதராசன் கூறுகிறார்.

Continue Reading →

ஆய்வு: செவ்வரளிமாலை கேட்டு முத்தாரம்மனை பேசவைக்கும் சு. செல்வகுமாரனின் கவிதைகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சு.செல்வகுமாரன் குமரிமாவட்டம் தெக்குறிச்சியில் பிறந்தவர். (03-06-1974) கடந்த பன்னீரெண்டு ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அரசின் பணியிடமாற்றத்தில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் குறித்து காத்திரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த பத்து வருடங்களாக தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம், புலம்பெயர் படைப்பிலக்கியங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருபவர். ஈழத்துப் படைப்புலகம் வலிகளை எழுதும் கவிதை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2015, ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, காவ்யா – 2008, சமகால நாவல்களில் புனைவின் அரசியல் என்.சி.பி.எச் – 2015, அ.முத்துலிங்கத்தின் புனைவு உலகம், கலைஞன் – 2015, ஆகியன இவரது நூல்களில் முக்கியமானவையாகும். திணை, மற்றும் பூவரசி சிற்றிதழ்களின் துணை ஆசிரியராக விளங்குபவர். மேலும் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக, (காவ்யா – 2012), உலுப்புக்காரனின் திசை,  (பூவரசி – 2016) எனும் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதை எழுத்து குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொண்ணூறுகளுக்கு பிறகு தமிழ் கவிதை பண்பாட்டு வேர்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்தது. குறிப்பாக உரைநடை மொழிக்கு உயிர் கிடைத்திருந்தது. இக் காலகட்டத்தில் தமிழ் கவிதை மொழி மக்கள் மொழியாகியது. கருத்தியல் ரீதியாகவும் புதிய பாடுபொருள்களை சுமந்து வரத் தொடங்கியது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டின் வேர்களை சுமந்து வெளிப்பட்ட ஒரு மண்ணின் வாழ்க்கை சு.செல்வகுமாரனின் கவிதைகளில் வெளிப்பட்டதை நாம் காண முடியும். அவரின் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக என்ற கவிதை புத்தகம் வெளிக்காட்டி இருக்கின்ற உலகம் பால்ய கால ஓர்மைகளின் வழி பயணத்தை தொடங்கி தாத்தா, அப்பா, அம்மா, தங்கம்மா கிழவி என இப்படி உறவுகளுக்குள்ளும், பூவரசம்பூ, பனங்கிழங்கின் பீலி, நொண்டங்காய், புன்னை மரக்கிளையில் ஊஞ்சல், நாருப்பெட்டி, தென்னம்பூ, வேட்டாளி, மரைக்காலில் நெல்மணி, இப்படி வாழ்க்கையின் பண்பாட்டின் பகுதிகளிலிருந்தும் வாழ்ந்த வாழ்க்கையின் பக்கங்களை சுமந்து கொண்டு கவிதை வருவதை நாம் காண முடிகின்றது.

“கொண்டையான் குளத்தில் மேலகரையில்
வளர்ந்து நின்ற வேப்பமரத்தில் ஏறி
உடலை சுருட்டி மூன்று சுற்றுச்சுற்றி
குளத்தில் குதித்து மூழ்கி
படிக்கரையில் தலையை மேலெழுப்பியதும்
நீச்சலடித்து தொட்டு விளையாடியதும்
பறித்த செந்தாமரைகளில் பெரிய மொட்டினை
சரஸ்வதி படத்தில் வைத்து படிப்பைக் கேட்டதும்
சங்கிலி பாசியாய் நிரம்பிக் கிடக்கின்றது”1

Continue Reading →