தோழர் வேலனின் ‘தேசிய இயக்கம் துயிலெழல்’ மற்றும் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) ‘டொராண்டோ’வில் நடைபெற்றபோது நான் ஆற்றிய சிற்றுரையினை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிடுகின்றேன். வ.ந.கிரிதரன் –
தோழர் வேலனை எனக்கு முகநூல் வழியாகத்தான் அறிமுகம். அவரது இயற்பெயர் கூட இதுவரையில் நான் அறிந்ததில்லை. ஆனால் அவரது மார்க்சியப்பார்வை பற்றி அவரது இணைய எழுத்துகளினூடு, நூல்களின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.. இன்று இங்கு நான் அவரது இந்நிகழ்வில் வெளியிட்டப்படவுள்ள நூல்கள் இரண்டைப்பற்றிச் என் நோக்கைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் பல அவரது வலைப்பதிவிலுள்ள கட்டுரைகளே. இக்கட்டுரைகளில் அவர் தேசம், தேசியம், ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டம், பின் நவீனத்துமும் , மார்க்சியமும், தேசிய விடுதலைப்போராட்டமும் போன்ற பல விடயங்களைப்பற்றிய தனது உறுதியான பார்வையினைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் அவரது உறுதியான் பார்வை தெளிவானதா இல்லையா என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன்னர் இத்தொகுதிக் கட்டுரைகளைப்பொறுத்தவரையில் முக்கியமான குறைபாடுகளாக நான் கருதுவது: இலக்கணப்பிழைகள். இலக்கணப்பிழைகள் என்னும்போது சில பிழைகள் வாசிப்பின் புரிதலைத் தடுப்பதில்லை. உதாரணமாக எழுவாய்க்குரிய பயனிலை சரியாக அமையாது போவதுமோரிலக்கணப்பிழை. ஆனால் அப்பிழைகள் புரிதலைத் தடுப்பதில்லை. மாறாக முடிவற்றுத் தொங்கும் வாக்கிய அமைப்புகள், குழப்பமான சொற்தொடர்கள் ஆகியன வாசகர்களின் புரிதலுக்குச் சவாலாக இருப்பவை. அவ்விதமானவற்றை வாசிப்பின்போது அவதானித்தேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்களில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களே சாதாரண வாசகர்களுக்குப் புரியாதவை. இந்நிலையில் இவ்விதமான இலக்கணத்தவறுகள் அவர்கள்தம் புரிதல்களைச் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. இத்தவறுகள் எதிர்காலப்பதிப்புகளில் களையப்படுதல் அவசியம்.
அடுத்த முக்கிய குறைபாடாக நான் கருதுவது இந்நூல் பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். மார்க்சியப்புரிதல்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நூல்கள் அல்ல இவை. இந்நிலையில் இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களுக்குரிய விளக்கங்கள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்கும் எனக்கருதுகின்றேன். உதாரணமாக திருத்தல் வாதம், பாகுபாட்டுச் சிந்தனைகள், தாராளவாதம், தரகு வர்க்கம் போன்ற பல சொற்கள் இந் நூலிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்கள் பலருக்கு மிகுந்த உதவியாகவிருந்திருக்கும். இதுவும் என் நிலைப்பாடு.