சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள். “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்” (கலி.132:4-5)
என்ற கலித்தொகைப் பாடலில் மூன்று வகையான முரசுகள் பற்றி சுட்டப்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். வீரமுரசு போர்க்காலத்திலும், போர்களங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மணமுரசு விழாக்காலங்களில் செய்திகளை அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,
“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்” (மணி.விழா.27-31)
என்று மணிமேகலை கூறும். “வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டதும் இடி போன்ற முழக்கினை உடையதும் ஆகிய முரசினைக் கச்சையானையின் கழுத்தின் மேலேற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியினை ஊரவர்க்கு, பழைமையினை உடைய குடியில் பிறந்தோன் அறிவித்தான் என்பர். இதனால் திருவிழாச் செய்தியினை ஊரவர்க்கு அறிவிக்கும் போது முரசு அறைந்து அறிவித்தல், மணிமேகலை காலத்தில் ஏற்பட்டது போலும். ஆனால் சங்க காலத்தில் குயவர்களே தெருத் தெருவாகச் சென்று விழாச் செய்தியினை உரத்துக்கூவி உரைத்தல் வழக்கமென்பதும், அப்போது அவர்கள் நொச்சி மாலையைச் சூடிச்செல்வர் என்பதும் நற்றிணைச் செய்யுளொன்றால் அறியலாம்”2 என்று வெ.வரதராசன் கூறுகிறார்.