” கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.”
— இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது. உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும் கதைகளும் புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற ‘ புதுமைப்பித்தன் விளக்கு’ விருது முதலானவற்றைப்பெற்றவர். தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர், மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க. நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன் நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர். சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர். ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.
தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர். சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர். உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால – மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர். அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஏயர் இந்தியா நிறுவனத்தில் பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி, ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.