அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர். கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.
முதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.