“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும் ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.
ஒரு சிறந்த கவிதையானது வாழ்வில் இன்பமும் துன்பமும் சேர்ந்த அனுபவங்களை மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படுகின்ற விலகல்களின் இடைவெளிகளையும் சொல்லநினைப்பது.
இளங்கவி சிவசேகரன், மக்கள் போரும் வாழ்வும் அலைக்கழிப்புமாக வாழ்ந்த காலங்களைத் தரிசித்திருக்கிறான். எப்போது இந்த வாழ்வு முழுமை பெறும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து வரும் மாந்தர்கள் போலவே அவனின் கிராம மாந்தர்களும் எப்போதும் நிரப்படாத வாழ்க்கை இடைவெளிகளுடனேயே கடந்து கொண்டிருக்கிறாhர்கள். அவ்வாறான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வரும் கவிஞனிடமும் சொல்வதற்கு ஏராளம் வார்த்தைகள் உள்ளன.
இத்தொகுப்பிலும் தான் வாழ்ந்த கிராம, குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப் பார்க்கின்ற அதேவேளை; காலம் மனிதர்களிடம் ஏற்படுத்திய வடுக்களையும் இன்னமும் தீர்க்;கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக்குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்;.
“இனிமேல் ஒன்றுமில்லை என்றெண்ணி
கண்ணீர் விடும் தருணங்களில்
ஏதோ ஒரு ரூபத்தில்
மனவயலுக்குள் முளைதள்ள
எத்தணித்துத் தோற்றுப்போகின்றன
வெட்கம் கெட்ட ஆசை விதைகள்”
(பசுமை தொலைத்த மரம்)
“ஆண்டுகள் பலவாய்
நிமிர்ந்து நிற்கத் தெம்பின்றி
கூனாகிப் போன முதுகு
கொஞ்சம் நிமிரப் பார்க்கும்”
(எழுநூற்றிமுப்பது ரூபாய் மட்டும்)