அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.
மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் – கொப்பிகள் – நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.
ஒரே கரிசனையோடு வாசிப்பு.
புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.
‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.
சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் – அசையான்.
அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.
எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.
படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.
முழு விஸ்வாசத்தோடு தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.
எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.
மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை, அவள் – தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய, ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.
அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.
அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.
மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா – இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.
ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.
எந்த நேரமும் – நெடுக, நெடுக இப்படித்தான்.
‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.